கோயம்புத்தூர்: ஆடிப்பட்ட விதைப்பு நேரத்தில் தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம் காய்கறிப் பயிர்களுக்கு சந்தைக் கணிப்பின் மூலம் முன்கூட்டியே நிர்ணயிக்கும் விலையை அடிப்படையாக வைத்து, விவசாயிகள் தாங்கள் விதைக்க வேண்டிய காய்கறிப் பயிரை தேர்வு செய்கிறார்கள்.

ஆடிப்பட்டம் என்பது மானாவரி விதைப்பிற்கு உகந்த காலம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் பருவத்தில் விதைக்கப்படும் பயிர்களின் வளர்ச்சியை தென்மேற்கு பருவக்காற்றுதான் தீர்மானிக்கிறது.

தமிழ்நாட்டில், கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், திருப்பூர், தேனி மற்றும் திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் தக்காளி அதிகம் விளைகிறது.

கத்தரிக்காயைப் பொறுத்தவரை, தருமபுரி, கிருஷ்ணகிரி, திண்டுக்கல், திருவண்ணாமலை மற்றும் வேலூர் ஆகிய மாவட்டங்கள் அதன் விளைச்சலுக்குப் புகழ்பெற்றவை.

வெண்டைக்காயைப் பொறுத்தவரை, சேலம், தேனி, தருமபுரி, திருவள்ளூர், கோயம்புத்தூர் மற்றும் மதுரை ஆகியவை அதன் விளைச்சலுக்குப் பெயர்பெற்றவை.

கடந்த 12 ஆண்டுகளாக முக்கிய ஆடிப்பட்ட காய்கறிப் பயிர்களான தக்காளி, கத்தரிக்காய் மற்றும் வெண்டைக்காய் ஆகியவற்றின் சந்தை விலையை முன்கணிப்பு செய்துவருகிறது. கோவையிலுள்ள தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம். ஒட்டன்சத்திரம், திருச்சி மற்றும் கோவை உழவர் சந்தைகளில் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது.

இந்த ஆய்வின் அடிப்படையில், நல்ல தரமான தக்காளியின் விலை 1 கிலோ ரூ.18 முதல் ரூ.20 என்பதாகவும், கத்தரியின் விலை 1 கிலோ ரூ.28 முதல் ரூ.31 என்பதாகவும், வெண்டையின் விலை 1 கிலோ ரூ.20 முதல் ரூ.22 என்பதாகவும் இருக்கும். இந்த முன்கூட்டிய விலை நிர்ணயிப்பு ஆய்வின்மூலம், தாங்கள் பயிர் செய்யவேண்டியவற்றை தேர்வு செய்கிறார்கள் விவசாயிகள்.