சென்னை: வக்புவாரிய கல்லூரி பேராசிரியர் நியமனத்தில் முறைகேடு தொடர்பாக, முன்னாள் அதிமுக எம்.பி. அன்வர் ராஜா உள்பட பலர்மீது சிபிஐ விசாரணைக்கு உச்சநீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. அதன்படி, அதிமுகவைச் சேர்ந்த முன்னாள்  அமைச்சர் நிலோபர் கபில், முன்னாள் எம்.பி. அன்வர் ராஜா ஆகியோரை  சிபிஐ விசாரிக்க தடையில்லை என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

வக்பு வாரியத்தின் கீழ் மதுரையில் இயங்கிவரும் கல்லூரியில், கடந்த 2017ம் ஆண்டு, பேராசிரியர்கள், உதவி பேராசிரியர்கள் நியமனத்தில் முறைகேடு நடைபெற்றதாக மதுரையை சேர்ந்த சர்தார் பாஷா என்பவர் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்குத் தொடர்ந்தார். அவரது, மனுவில், கடந்த 2017ம் ஆண்டு இந்த கல்லூரியில் நியமிக்கப்பட்ட 30 பேராசிரியர்களிடம் 30 முதல் 35 லட்ச ரூபாய் பெற்று கொண்டு நியமித்துள்ளனர். குறிப்பாக, இஸ்லாம் மதத்தைச் சேர்ந்தவர்களிடம் 30 லட்ச ரூபாயும், பிறரிடம் 35 லட்ச ரூபாய் என லஞ்சம் பெற்று நியமனம் செய்துள்ளதாக குற்றம்சாட்டியதுடன்,  அந்த லஞ்ச பணத்தை வக்பு வாரிய உறுப்பினர்கள், கல்லூரி நிர்வாகிகள் என பலர் பங்கிட்டு கொண்டுள்ளனர்.

ஆனால், இவ்வாறு நியமனம் செய்யப்பட்டவர்கள் பல்கலைக்கழக மானியக் குழு (UGC) நிர்ணயம் செய்த கல்வித் தகுதியைப் பெற்றிருக்கவில்லை எனவும், நாடாளுமன்ற உறுப்பினர் அன்வர் ராஜா மற்றும் அமைச்சர் நிலோபர் கபிலின் நிர்பந்தத்தின் அடிப்படையில் நியமனங்கள் நடைபெற்றுள்ளது  எனவும்  இந்த விவகாரத்தில் பல வக்பு வாரிய உறுப்பினர்களுக்கும், கல்லூரி நிர்வாகிகள் ஜமால் மொகைதீன் உள்ளிட்ட பலருக்கு தொடர்புள்ளது எனவும் அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

எனவே இதுதொடர்பாக சிபிஐ விசாரணை மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணையும் நடத்த வேண்டும் என சர்தார் பாஷா கோரியிருந்தார். இந்த மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை, புகார் மீது முகாந்திரம் இருப்பதாக தெரிகிறது எனக்கூறி சி.பி.ஐ விசாரணைக்கு உத்தரவிட்டது. அந்த உத்தரவை எதிர்த்து, குற்றம் சாட்டப்பட்ட ஜமால் மொகைதீன் என்பவர் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்திருந்தார்

இந்த மனு கடந்த 2019ம் முதல் முறையாக விசாரணைக்கு எடுக்கபட்ட நிலையில், பின்னர் நெடுநாட்களாக நிலுவையில் இருந்து வந்தது இந்நிலையில் இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் நீதிபதி சூர்யகாந்த் தலைமையிலான அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தபோது சி.பி.ஐ தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் வாதிடும்போது.. ”இந்த விவகாரத்தில், விசாரணை செய்யப்பட்டு அறிக்கையும், குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்யப்பட்டு விட்டது, எனவே இந்த நேரத்தில் நீதிமன்றம் எந்த உத்தரவு பிறப்பித்தாலும் வழக்கு விசாரணையில் பாதிப்பு ஏற்படும் எனவே மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது” எனக் கூறினர்.

இதனையடுத்து சி.பி.ஐ தரப்பு வாதத்தை ஏற்ற நீதிபதிகள் தற்போதைய நிலையில் வழக்கு விசாரணையில் தலையிட விரும்பவில்லை என தெரிவித்து, ஜமீல் மொகைதீன் தொடர்ந்த மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்தனர்.

இதன் மூலம் இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட முன்னாள் அமைச்சர் நிலோபர் கபில், நாடாளுமன்ற உறுப்பினர் அன்வர் ராஜா, வக்பு வாரிய கல்லூரியின் அப்போதைய செயலாளர் ஜமீல் மொகைதீன் மீதான சி.பி.ஐ விசாரணைக்கு தடையில்லை என்பது உறுதியாகியுள்ளது.

இதைத்தொடர்ந்து, அவர்கள் மீது விரைவில் சிபிஐ தனது விசாரணையை தொடங்கும் என்று தெரிகிறது.