சென்னை

ண்டை மாநிலங்களுக்கு சமமாக எம் சாண்ட் மணல் விலையை தமிழகத்தில் குறைக்க வேண்டும் என மணல் லாரி உரிமையாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தமிழ்நாட்டில் தற்போது கட்டுமானப் பொருட்களின் விலை மிகவும் அதிகரித்துள்ளது.   குறிப்பாக எம் சாண்ட் மணல் விலை தமிழகத்தில் மிகவும் அதிகமாக உள்ளதாகக் கூறப்படுகிறது.   இதற்கு முக்கிய காரணம் மலைக் கற்கள் உடைக்கும் குவாரிகள் உரிமைகள் வழங்குவதில் விளையாடும் லஞ்சமே ஆகும் எனப் பல மணல் லாரி உரிமையாளர்கள் கூறி வருகின்றனர்.  இந்த உரிமம் வழங்கும் முறையில் வெளிப்படைத்தன்மை இல்லை என்பதையும் அவர்கள் சுட்டிக் காட்டி உள்ளனர்.

இது குறித்து தமிழக மணல் லாரி உரிமையாளர்கள் சங்கத் தலைவர் யுவராஜ், “நாங்கள் பலமுறை ஒரு சில குவாரிகளில் நடைபெறும்  போலி பில்களைக் குறித்து அரசுக்குத் தெரிவித்துள்ளோம்.  இது குறித்த விவரங்களை அரசு தகவல் அறியும் சட்டத்தின் கீழ் அளிக்க வேண்டும்.   பல அரசு உயர் அதிகாரிகள் இந்த குவாரிகளில் பங்குதாரர்களாக உள்ளனர்.    மத்திய அரசு பாதுகாப்பு அளிக்கும் என்றால் அதற்கான ஆதாரங்களை நான் வெளியிடத் தயாராக உள்ளேன்.

தற்போது மாநிலத்தில் மணல் விலை மிகவும் அதிகமாக உள்ளது. உதாரணத்துக்குச் சென்னையில் மலேசிய மணல் டன்னுக்கு ரூ.2300 விலையில் விற்கப்படுகிறது  அதே மணல் மலேசியாவில் இருந்து சென்னையை விட அதிக தூரம் உள்ள மங்களூருவில் ரூ.1650 க்கும் ஆந்திராவின் கிருஷ்ணாபட்டினம் பகுதியில் ரூ.1500க்கும் விற்கப்படுகிறது.

எனவே அரசு மணல் விலையை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.  அத்துடன் எம் சாண்ட் மணல் விற்பனையை தெற்கு மாவட்டங்களான மதுரை மற்றும் திருநெல்வேலி பகுதிகளில் அரசு நிறுத்தி வைத்துள்ளது.  அந்த தடையை உடனடியாக நீக்க வேண்டும்.  நாங்கள் கடந்த 8 மாதங்களாக இது குறித்து முதல்வரிடம் பேச முயற்சி செய்தோம்.   ஆனால் அவர் எங்களைச் சந்திக்க மறுத்து வருகிறார்”எனத் தெரிவித்துள்ளார்.