சென்னை: உத்தரகாண்ட் மாநிலத்திற்கு தேவையான அனைத்து உதவிகளையும் வழங்க தமிழக அரசு தயாராக இருப்பதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

உத்தரகாண்ட் மாநிலம் சமோலி மாவட்டத்திலுள்ள நந்ததேவி பனிப்பாறை நேற்று உடைந்ததால் அப்பகுதிகளில் உள்ள நதிகளில் திடீரென்று வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. ஆற்றின் கரையோரம் அமைந்திருந்த வீடுகள் வெள்ளத்தில் அடித்து சென்றது.

அதில் 153க்கும் மேற்பட்டோர் காணவில்லை என்றும் 10 பேர் சடலமாக மீட்கப்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.  இந்த சம்பவத்தை தொடர்ந்து மாநில பேரிடர் மேலாண்மைத் துறை 4 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.

இந் நிலையில், உத்தரகாண்ட் மாநிலத்திற்கு தேவையான அனைத்து உதவிகளையும் வழங்க தமிழக அரசு தயாராக இருப்பதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

இது குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தமது ட்விட்டர் பக்கத்தில் கூறி உள்ளதாவது: உத்தரகாண்ட்- அலக்நந்தா, தவுலிகங்கா நதிகளில் பனிப்பாறை உடைந்து உண்டான வெள்ளத்தால் பலர் உயிரிழந்துள்ள துயரச் செய்தி அறிந்து மிகுந்த வேதனையடைந்தேன். உயிரிழந்தோர் குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கல் என்றும் உத்தரகாண்ட் மாநிலத்திற்கு தேவையான அனைத்து உதவிகளையும் வழங்க தமிழக அரசு தயாராக உள்ளது என்று தெரிவித்துள்ளார்.