சென்னை

தமிழகத்தில் 6 மாவட்டங்களுக்குக் கனமழையால் ரெட் அலர்ட் விடப்பட்டு 27 மாவட்டங்களில் கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.

தமிழகத்தில் வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப் பகுதி வலுவடைந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக மாறியது. அடுத்த 12 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என  வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

இந்த குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி காரணமாக மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், புதுக்கோட்டை, தஞ்சாவூர், ராமநாதபுரம் ஆகிய 6 மாவட்டங்களுக்கு ரெட் எச்சரிக்கை எச்சரிக்கை விடுத்து சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் உத்தரவிட்டுள்ளது.  தலைநகர் சென்னையில் தற்போது வரை பல்வேறு இடங்களில் ஒரு சில பகுதியில் மழை பெய்து வருகிறது.

திருவாரூரில் 18.5 செ.மீ., வலங்கைமானில் 12.2 செ.மீ. மன்னார் குடியில் 14 செ.மீ., தரங்கம் பாடியில் 15.8 செ.மீ. சீர்காழியில் 12.7 செ.மீ. மணல்மேடு பகுதியில் 12 செ.மீ. , கொள்ளிடத்தில் 11.4 செ.மீ மழைப் பதிவாகியுள்ளது. அதிக பட்சமாக  திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியில் 21.5செ.மீ மழைப் பதிவாகியுள்ளது.

இந்த தொடர் மழை காரணமாக கள்ளக்குறிச்சி, கரூர், வேலூர் , நாமக்கல், ராணிப்பேட்டை, தேனி, விழுப்புரம், சேலம், திருவண்ணாமலை, திண்டுக்கல், விருதுநகர், அரியலூர், மதுரை, ராமநாதபுரம், பெரம்பலூர், சிவகங்கை, திருச்சி, கடலூர், திருப்பூர் ஆகிய மாவட்டங்களுக்கு இன்று விடுமுறை அறிவித்து  அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர்.

அடுத்த 2 நாட்களுக்குச் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, தஞ்சாவூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், புதுக்கோட்டை, புதுச்சேரி, காரைக்காலில் விடுமுறை அறிவித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.