புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம்  வேங்கைவயல் நீர்த்தேக்க தொட்டி இடிக்க தமிழகஅரசு அனுமதி வழங்கி உள்ளது. அதற்கு பதிலாக புதிய நீர்த்தேக்க தொட்டி கட்ட ரூ.9 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் கிராமத்தில் பட்டியிலின் மக்கள் வசித்து வரும்  பகுதியிலு அமைந்துள்ள குடிநீர் தேக்க தொட்டியில், கடந்த சில வாரங்களுக்கு முன்பு மலம் கலக்கப்பட்டது. இந்த தண்ணீரை குடித்த சிறுவர்கள் உள்பட பலருக்கு உடல்நலம் பாதிக்கப்பட்ட நிலையில், அவர்கள், புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களுக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள், குழந்தைகளைப் பரிசோதித்தபோது, அவர்களுக்கு, குடிநீரால் பிரச்னை ஏற்பட்டுள்ளது எனக் கூறியுள்ளார்.

பின் வட்டார வளர்ச்சி அலுவலர் மற்றும் தாசில்தார் உள்ளிட்டோர் குடிநீர் தொட்டிகளை பார்வையிட்டனர். அப்போது, அந்த குடிநீர் தொட்டியில்  மலம் கலக்கப்பட்டது உறுதியானது. இதனை அடுத்து மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆகியோர் அந்த பகுதியில் தொடர்ந்து சோதனையில் ஈடுபட்டனர். பொதுமக்களிடம் குறைகளைக் கேட்டு அறிந்த மாவட்ட ஆட்சியரிடம் அந்தப் பகுதியில் இரட்டைக்குவளை முறை பயன்படுத்துவதும், பிற்படுத்தப்பட்ட மக்களை கோயிலுக்குள் அனுமதிக்கவில்லை எனவும் குற்றச்சாட்டு எழுப்பப்பட்டது.

இதனையடுத்து மாவட்ட ஆட்சியர் முன்னிலையில் கோயிலுக்குள் ஆதிதிராவிட மக்கள் அழைத்துச் செல்லப்பட்டனர்.அதனைத் தொடர்ந்து காவல் துறையினர் இந்த வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றினர். தற்போது சிபிசிஐடி போலீசார் அப்பகுதியில் ஒவ்வொரு வீட்டிற்கும் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.  தீண்டாமை மற்றும் மனித இழிவின் அடையாளமாக இருக்கும் அந்த தொட்டியை அகற்ற வேண்டும் என திருமாவளவன் எம்பி உள்ளிட்ட பலர் குரல் கொடுத்து போராடி வந்த நிலையில், தற்போது அந்த தொட்டியை இடிக்க தமிழக அரசு அனுமதி வழங்கியிருக்கிறது.

புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் கிராமத்தில் மனித கழிவுகள் கலக்கப்பட்ட நீர்தேக்க தொட்டியை இடிக்க தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது. மேலும், தமிழக அரசு பாதிக்கப்பட்ட மக்கள் வசிக்கும் பகுதிக்கு புதிய குடிநீர் இணைப்புகளை செய்து தருவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

அதனை தொடர்ந்து புதிய குடிநீர்தேக்க தொட்டியை கட்டுவதற்கு 9 லட்ச ரூபாய் நிதியை மாநிலங்களவை உறுப்பினர் எம்எம்.அப்துல்லா தனது எம்பி தொகுதி நிதியில் இருந்து ஒதுக்கியுள்ளார். விரைவில் அதற்கான பணிகளும் நடைபெறும் என கூறப்படுகிறது.