சென்னை: குடியரசு தினத்தையொட்டி ஆளுநர் மாளிகை தரப்பில் வெளியிடப்பட்டுள்ள அழைப்பிதழில் தமிழ்நாடு மற்றும் தமிழ் ஆண்டு இடம்பெற்றுள்ளது.

காசி தமிழ் சங்கமம்  நிகழ்ச்சியில் கலந்துகொண்டவர்களை பாராட்டும் நிகழ்ச்சியில் பேசிய ஆளுநர் ஆர்.என்.ரவி, தமிழ்நாடு என்பதற்கு பதில் தமிழகம் என்று சொல்வதே பொருத்தமாக இருக்கும் என்று கூறினார். இது சலசலப்பை  ஏற்படுத்தியது. இதையடுத்து,  ஆளுநர் மாளிகை பொங்கல் விழாவிற்காக அனுப்பிய அழைப்பிதழில் தமிழ்நாடு என்பதற்கு பதிலாக தமிழக ஆளுநர் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.  அத்துடன் தமிழக அரசின் முத்திரையும் இடம்பெறாமல் இந்திய அரசின் முத்திரை இடம்பெற்று இருந்தது.

தமிழ்நாடு அரசின் பணத்தில் சொகுசாக வாழும் ஆளநரின் இதுபோன்ற மாநில அரசுக்கான எதிரான நடவடிக்கைக்கு  பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் தங்களது கண்டனங்களை தெரிவித்துக் கொண்டனர்.  அத்துடன் இந்த தமிழ்நாடு சர்ச்சை குறித்து டி.ஆர். பாலு , அமைச்சர்  ரகுபதி அடங்கிய குழுவினர் குடியரசுத் தலைவரை நேரில் சந்தித்து மனு வழங்கினர். இதையடுத்து ஆளுநர் தரப்பிலிருந்து விளக்க கடிதம் ஒன்று வந்தது.  அதில் தான் தமிழகம் என்று குறிப்பிடலாம் என்று சொன்னது  தவறாக புரிந்து கொள்ளப்பட்டது என்று  விளக்கம் அளிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில், ஜனவரி 26ந்தேதி சென்னையில் நடைபெறும் குடியரசு தின விழாவிற்கான அழைப்பிதழில்  தமிழ்நாடு அரசு முத்திரையுடன் தமிழ்நாடு ஆளுநர் என குறிப்பிடப்பட்டு அழைப்பிதழ் வெளியாகி உள்ளது.