சென்னை:  ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் போட்டியிட விரும்பும் அ.தி.மு.கவினர் விருப்பமனு வழங்கலாம்  என அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச் சாமி அறிவிப்பு வெளியிட்டு உள்ளர்.

ஈரோடு கிழக்கு தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக இருந்த திருமகன் ஈவெரா ஜனவரி 4ஆம் தேதி மாரடைப்பால் காலமானார். இதையடுத்து, அந்தத் தொகுதி காலியான தாக அறிவிக்கப்பட்ட நிலையில், அத்தொகுதிக்கான இடைத்தேர்தல் பிப்ரவரி 27ஆம் தேதி நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அண்மையில் அறிவித்தது.

தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நேரத்தில் இருந்து ஈரோடு கிழக்கு தொகுதியில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளன. இடைத்தேர்தல் தேதி அறிவிக்கப் பட்டுள்ளதால் ஈரோடு கிழக்குத் தொகுதியில் போட்டியிடப்போவது யார் என்ற கேள்வி எழுந்துள்ளது. திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சி சார்பில் ஈவிகேஎஸ் இளங்கோவன் அறிவிக்கப்பட்டு உள்ளார்.

இந்த நிலையில், அதிமுக கூட்டணி சார்பில், அதிமுக போட்டியிடும் என கூட்டணி கட்சிகள் அறிவித்து உள்ளன. இதையடுத்து ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில்  போட்டியிட விரும்பும் அ.தி.மு.கவினர் விருப்பமனு வழங்கலாம் என அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்து உள்ளார்.

அதன்படி, இன்றுமுதல் (23ந்தேதி) 26ந்தேதி வரை விருப்ப மனுக்களை  தலைமைக்கழகம் எம்ஜிஆர் மாளிகையில்  தினமும் காலை 10மணி முதல்மாலை 5மணி வரை வழங்கலாம் என்றும், விண்ணப்ப கட்டணம் ரூ.150ஆயிரம் செலுத்தி படிவத்தை வாங்கி முழுமையாக நிரப்பி வழங்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.