சென்னை; ராஜீவ்காந்தி கொலை வழக்கு குற்றவாளிகளில் ஒருவரான ரவிச்சந்திரனுக்கு 8-வது முறையாக தமிழகஅரச மேலும் ஒரு மாதம் பரோல் நீட்டிப்பு செய்துள்ளது. இது காங்கிரசாரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

ஏற்கனவே பேரறிவாளனுக்கும் தொடர்ந்து பரோல் நீட்டிக்கப்பட்டு வந்த நிலையில், அவரை, தமிழகஅரசின் தீர்மானத்தை காரணத்தை காட்டி உச்சநீதிமன்றம் விடுதலை செய்தது. இந்த நிலையில், ராஜீவ்காந்தி கொலை வழக்கு குற்றவாளி ரவிச்சந்திரனையும் விடுதலை செய்ய தமிழகஅரசு திட்டமிட்டு வருகிறதோ என்ற அதிருப்தி நடுநிலையாளர்களிடையே  ஏற்பட்டுள்ளது.

ராஜீவ்காந்தி கொலை வழக்கு கைதயான ரவிச்சந்திரன் தற்போது பரோலில் இருந்து வருகிறார். தனது தாயாருக்கு உடல்நிலை சரியில்லை என காரணம் காட்டி கடந்த ஆண்டு  நவம்பர் 17-ந் தேதி ரவிச்சந்திரனுக்கு முதன்முறையாக திமுக அரசு  ஒரு மாதம் பரோல் வழங்கியது. இதைத்தொடர்ந்து அவரது கோரிக்கையை ஏற்று தற்போது 8வது முறையாக பரோலை தமிழகஅரசு நீட்டித்து உள்ளது.

பேரறிவாளனைப்போல ரவிச்சந்திரனுக்கும் தமிழகஅரசு தொடர்ந்து பரோலை நீட்டித்து வருவது, அவரையும் விடுதலை செய்வதற்கான நடவடிக்கையா என கேள்வி எழுப்பப்பட்டு வருகிறது. இது  காங்கிரஸ் கட்சியினரிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

இதற்கிடையில், பேரறிவாளன் விடுதலை செய்யப்பட்டது போல தன்னையும் விடுதலை செய்ய வேண்டும் ரவிச்சந்திரன் முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு,கடந்த மாதம் கடிதம் எழுதி இருந்தது குறிப்பிடத்தக்கது.