சென்னை

னி ஒவ்வொரு வருடமும் தமிழக அரசு சிறந்த விவசாயிகளுக்குப் பரிசு அளிக்க உள்ளதாக அறிவித்துள்ளது.

திமுக அரசு பதவி ஏற்றதில் இருந்து விவசாயிகளுக்கு ஊக்கம், அளிக்கும் வகையில் பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.  அவ்வகையில் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில், “இனி ஒவ்வொரு வருடமும் வேளாண் ஏற்றுமதியில் சிறந்து விளங்கும் விவசாயிகளுக்கு பரிசு. வேளாண்மையில் புதிய உள்ளூர் தொழில்நுட்பம், புதிய இயந்திரங்கள் கண்டுபிடிப்பு, இயற்கை வேளாண்மை, விளைபொருள் ஏற்றுமதி ஆகியவற்றில் சிறந்து விளங்கும் விவசாயிகளை 2021-22 ஆம் ஆண்டிலிருந்து தமிழக அரசு ஊக்குவித்துப் பரிசளிக்கும்.

இதன்படி 2021-22 ஆம் ஆண்டில் உள்ளூர் புதிய விவசாய தொழில்நுட்பங்களையும், இயந்திரங்களையும் கண்டுபிடிக்கும் விவசாயிகளை ஊக்குவித்து ரூபாய் 2 இலட்சம் பரிசு வழங்கப்படவுள்ளது.  அத்துடன் இயற்கை வேளாண்மை மற்றும் வேளாண் ஏற்றுமதியில் சிறந்து விளங்கும் விவசாயிகளையும் ஊக்குவித்து தலா ரூபாய் 2 இலட்சம் பரிசு வழங்கப்படவுள்ளது.

இந்த போட்டியில் கலந்து கொள்ள விரும்பும் விவசாயி, முதலில் கைபேசியில் உழவன் செயலி மூலமாகத் தனது பெயரைப் பதிவு செய்து கொள்ள வேண்டும்.  போட்டியில் குத்தகைக்கு சாகுபடி செய்பவர்களும் கலந்து கொள்ளலாம்.  அந்தந்த வட்டார வேளாண்மை உதவி இயக்குநர்களைத் தொடர்பு கொண்டு, உரிய விண்ணப்பப் படிவத்தினை பூர்த்தி செய்து வட்டார வேளாண்மை விரிவாக்க மையத்தில்  நுழைவுக் கட்டணமாக நூறு ரூபாய் செலுத்த வேண்டும். பின்னர் கட்டணம் செலுத்திய இரசீதுடன் விண்ணப்ப படிவத்தை இணைத்து சமர்ப்பிக்க வேண்டும்.

பரிசுக்கு தகுதியான விவசாயிகளின் கண்டுபிடிப்புகள் மாவட்ட தேர்வுக்குழுவால் தேர்வு செய்யப்பட்டு, பின் மாநிலக்குழுவிற்குப் பரிந்துரை செய்யப்படும்.  பிறகு விண்ணப்பங்கள் மாநிலக்குழுவால் பரிசீலிக்கப்பட்டு புதிய உள்ளூர் வேளாண் தொழில்நுட்ப கண்டுபிடிப்பிற்கு ஒரு விவசாயியையும் புதிய வேளாண் இயந்திர கண்டுபிடிப்பிற்கு ஒரு விவசாயியையும் தேர்வு செய்து தலா ஒரு இலட்சம் வீதம் பரிசு வழங்கப்படும்.

மேலும் இயற்கை வேளாண்மையில் சிறந்து விளங்கும் விவசாயிகளுக்கு முதல் பரிசாக ரூபாய் ஒரு இலட்சமும், இரண்டாம், மூன்றாம் பரிசாக முறையே 60 ஆயிரம், 40 ஆயிரம் ரூபாயும் வழங்கப்படும். அத்துடன் வேளாண் ஏற்றுமதியில் சிறப்பாக செயலாற்றும் விவசாயிக்கு பரிசாக ரூ.2 இலட்சமும் வழங்கப்படவுள்ளது.” என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கு  விண்ணப்பிக்கக் கால அவகாசம், மார்ச் 18 ஆம் தேதியுடன் முடிவடைய இருப்பதால், தகுதியுள்ள விவசாயிகள் உடனடியாக தங்கள் பகுதியிலுள்ள வட்டார வேளாண்மை உதவி இயக்குநர், துணை இயக்குநர் (தோட்டக்கலைத் துறை), வேளாண்மை துணை இயக்குநர் (வேளாண் வணிகம்) ஆகியோர்களைத் தொடர்பு கொண்டு பயனடையுமாறு அரசு கேட்டுக் கொண்டுள்ளது.