ஸ்டெர்லைட் ஆலையின் மின் இணைப்பைத் துண்டித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக மே 22ஆம் தேதி நடைபெற்ற போராட்டத்தில் கலவரம் வெடித்தது. போராட்டக்காரர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட வந்தபோது காவலர்களுக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே மோதல் வெடித்தது.

தடைகளை மீறி போராட்டக்காரர்கள் ஆயிரக்கணக்கானோர் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நுழைந்தனர். அப்போது காவல்துறையினர் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் 13 பேர் வரை பலியானார்கள்.

இந்நிலையில், ஸ்டெர்லைட் ஆலைக்கான மின்சார இணைப்பைத் துண்டித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் அறிவுறுத்தலின்பேரில் இந்த நடவடிக்கையை மின்சார வாரியம் எடுத்துள்ளது.

இதன்படி இன்று காலை 5.15 மணிக்கு ஸ்டெர்லைட் ஆலைக்கு மின் தொடர்பு துண்டிக்கப்பட்டது.