குடும்பத்தலைவிகளுக்கு மாதம் ரூ. 1000 உரிமைத் தொகை வழங்க மத்திய வருமான வரித்துறையிடம் இருந்து வருமான வரிசெலுத்துவோர் விவரங்களை தமிழக அரசு கேட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது.

திமுக ஆட்சிக்கு வந்தால் குடும்பத்தலைவிகளுக்கு மாதம் ரூ. 1000 உரிமைத் தொகை வழங்கப்படும் என்று 2021ம் ஆண்டு தேர்தலின் போது வாக்குறுதி அளித்தது.

இதுவரை அதுகுறித்து எந்த ஒரு அறிவிப்பும் வராத நிலையில் இதுகுறித்து அதிமுக உள்ளிட்ட முக்கிய எதிர்க்கட்சிகள் கேள்வியெழுப்பி வருகின்றன.

அதேவேளையில் குடும்பத்தலைவிகளுக்கு உரிமைத் தொகை வழங்கப்படும் என்று கூறியுள்ளதால் ரேஷன் அட்டைகளில் குடும்பத்தலைவருக்கு மாற்றாக பெண்களை குடும்பத்தலைவிகளாக மாற்ற மக்கள் தீவிரம் காட்டி வந்தனர்.

இதுபோன்ற எந்த ஒரு செயலுக்கும் பதிலளிக்காமல் மௌனம் காத்து வந்த திமுக அரசு யாரும் எதிர்பாராத வகையில் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வந்த நிலையில் இந்த திட்டம் குறித்து மார்ச் 20 ம் தேதி தாக்கல் செய்யப்பட இருக்கும் பட்ஜெட்டில் அறிவிப்பு வெளியாகும் என்று இடைத்தேர்தல் பரப்புரையின் போது முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தெரிவித்தார்.

இந்த நிலையில், இந்த திட்டத்தின் பயனாளிகளை தீர்மானிக்க மத்திய அரசின் வருமான வரி துறையிடம் வருமான வரி கட்டுவோர் விவரங்களை கேட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

தமிழ்நாட்டில் சுமார் 50 லட்சம் பேர் வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதாகக் கூறப்படுகிறது.

மேலும், தமிழ்நாட்டில் மொத்தம் 35 லட்சம் நான்கு சக்கர வாகனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் கார் உள்ளிட்ட நான்கு சக்கர வாகனம் வைத்திருப்போர் தரவுகளும் சேகரிக்கப்படுவதாகத் தெரிகிறது.

அனைவரும் ஏற்றுக்கொள்ளக் கூடிய வகையில் ஒரு நியாயமான திட்டமாக இந்த திட்டத்தை நடைமுறைப் படுத்த மாநில அரசு முயற்சி செய்து வருவதையடுத்து இந்த விவரங்கள் சேகரிக்கப்படுவதாக அதிகாரிகள் கூறியுள்ளனர்.