சேப்பாக்கம் ஸ்டேடியத்தில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள பார்வையாளர் மாடத்திற்கு கலைஞர் கருணாநிதியின் பெயர் சூட்டப்படுகிறது.

அண்ணா பெயரில் உள்ள பெவிலியனை கலைஞர் கருணாநிதி முதல்வராக இருந்தபோது திறந்து வைத்தார். தற்போது அண்ணா பெவிலியனுக்கு அருகில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள இரண்டு பார்வையாளர் மாடங்களை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வரும் 17 ம் தேதி திறந்து வைக்கிறார்.

சென்னையில் நடைபெறும் கிரிக்கெட் போட்டிகளின் போது தவறாமல் போட்டியை ரசிக்கும் கலைஞர் கருணாநிதி சேப்பாக்கம் தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

85 ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்த ஸ்டேடியத்தில் கடந்த சில ஆண்டுகளாக அதிகளவில் சர்வதேச போட்டிகள் நடைபெறவில்லை என்றபோதும் ஐ.பி.எல் போட்டிகள் நடைபெற்று வந்தது.

22ம் தேதி இந்தியா – ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான மூன்றாவது சர்வதேச ஒருநாள் போட்டி இங்கு நடைபெற இருக்கிறது. இதற்கான டிக்கெட்டுகள் 13ம் தேதி முதல் ஆன்லைனில் விற்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள கேலரிகளை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைக்கிறார், இந்த நிகழ்ச்சியில் விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், கிரிக்கெட் வீரர் எம்.எஸ். தோனி மற்றும் தமிழ்நாடு கிரிக்கெட் சங்க தலைவர் அசோக் சிகாமணி ஆகியோர் கலந்துகொள்ள இருக்கிறார்கள்.