சென்னை
வரும் 6 ஆம் தேதியுடன் தமிழக சட்டப்பேரவை தேர்தல் நடப்பதால் இன்று இறவு 7 மணியுடன் பிரசாரம் ஓய்கிறது.
வரும் மே மாதம் 24 ஆம் தேதியுடன் தமிழக சட்டப்பேரவை ஆயுட்காலம் முடிவடைகிறது. இதையொட்டி தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளிலும் நாளை மறுநாள் 6 ஆம் தேதியன்று வாக்குப்பதிவு நடக்கிறது. இங்கு மொத்தம் 3998 பேர் போட்டி இடுகின்றனர். இந்த தேர்தலை முன்னிட்டு அனைத்துக் கட்சிகளும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன.
திமுக அணியின் சார்பாக திமுக தலைவர் முக ஸ்டாலின் கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாகச் சூறாவளி பிரசாரம் செய்து வருகிறார். அத்துடன் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, வைகோ, திருமாவளவன், முத்தரசன், பாலகிருஷ்ணன், கனிமொழி, உதயநிதி உள்ளிட்ட பலரும் பிரசாரம் செய்கின்றனர்.
அதிமுக அணிக்காக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம், பிரதமர் மோடி, மத்திய அமைச்சர் அமித்ஷா, ராமதாஸ், அன்புமணி, ஜிகே வாசன், நட்டா, யோகி ஆதித்யநாத், ஸ்மிரிதி இராணி உள்ளிட்ட பலர் பிரசாரம் செய்துள்ளனர்.
இன்று இரவு 7 மணியுடன் தேர்தல் பிரசாரம் ஓய்கிறது. தேர்தல் ஆணையம், ”அனைத்து கட்சிகளும் இன்று இரவு7 மணியுடன் பிரசாரத்தை நிறுத்தி விட வேண்டும். இனி வீடு வீடாகச் சென்று வாக்கு கேட்கக் கூடாது. இன்று மாலை 7 மணியுடன் தொகுதிக்குச் சம்பந்தம் இல்லாத நபர்கள் வெளியேறி விட வேண்டும். ” என உத்தரவு இட்டுள்ளது.
காவல்துறையினர் அனைத்து தங்கும் விடுதிகள், திருமண மண்டபங்களில் சோதனை நடத்தி தொகுதிக்கும் சம்பந்தம் இல்லாத நபர்கள் அங்கு இருந்தால் அவர்களை வெளியேற்றும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் சமூக வலைத் தளங்கள், திரைப்படம், தொலைக்காட்சி, வானொலி, உள்ளிட்ட அனைத்திலும் பிரசாரம் செய்யத் தடை விதிக்கப்பட்டுள்ளதால் அனைத்தும் கண்காணிக்கப்படுகிறது.