டெல்லியில் விவசாயிகளைச் சந்தித்தார் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி!

Must read

TN CM Edappady Palanismy met farmers in Delhi

 

டெல்லியில் 40 நாட்களைக் கடந்து போராட்டம் நடத்தி வரும் தமிழக விவசாயிகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேரில் சென்று சந்தித்தார்.

 

 

பயிர்க்கடன் தள்ளுபடி, வறட்சி நிவாரணம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லியில் 41வது நாளாக விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். அவர்களை அரசியல் தலைவர்கள் பலர் சந்தித்து பேசியுள்ளனர். ஆனால் முதலமைச்சர் பழனிசாமி அவர்களிடம் நேரில் சென்று பேச்சுவார்த்தை நடத்தவில்லை என விமர்சனங்கள் எழுந்தன.

 

இதனிடையே, தமிழக முதலமைச்சர் நேரில் வந்து சந்தித்து உறுதிமொழிக் கடிதத்தை அளித்தால், தாங்கள் போராட்டத்தைக் கைவிடத் தயார் என விவசாயிகள் போராட்டக்குழு தலைவர் அய்யாக்கண்ணு தெரிவித்திருந்தார்.

 

இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் டெல்லியில் நடைபெறவுள்ள நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி டெல்லி சென்றார். கூட்டத்தில் கலந்துகொள்வதற்கு முன்பாக டெல்லியில் போராடும் விவசாயிகளை அவர் இன்று சந்தித்தார். அப்போது மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரையும் அவருடன் இருந்தார். விவசாயிகள் கோரிக்கைகள் அடங்கிய மனுவை அய்யாக்கண்ணு முதலமைச்சரிடம் அளித்தார்.

 

அப்போது பேசிய முதலமைச்சர் எடப்படி பழனிச்சாமி, ‘விவசாயிகளின் கோரிக்கையை நிறைவேற்ற அனைத்து நடவடிக்கைகளையும் தமிழக அரசு எடுத்துவருகிறது. முக்கியமான கோரிக்கைகளை அய்யாக்கண்ணு வைத்துள்ளார். விவசாயிகளின் கோரிக்கைகள் குறித்து பிரதமரிடம் வலியுறுத்தப்படும். வங்கிக் கடனை ரத்து செய்ய பிரதமரிடம் வலியுறுத்த உள்ளேன். தேசிய நதிகளை இணைக்க பிரதமரிடம் வலியுறுத்துவேன். விவசாயிகள் போராட்டத்தை கைவிட வேண்டும்’ என்று தெரிவித்தார். இதனால், விவசாயிகள் போராட்டம் விரைவில் முடிவுக்கு வரும் எனத் தெரிகிறது.

More articles

Latest article