சென்னை: மாவட்டங்களுக்கு கடன் வழங்கும் விவகாரத்தில் ரிசர்வ் வங்கி சுற்றறிக்கை தொடர்பாக பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார்.

இது தொடர்பாக அவர் எழுதியுள்ள கடிதத்தில் கூறி இருப்பதாவது: ரிசர்வ் வங்கி வெளியிட்ட சுற்றறிக்கையின் சில ஷரத்துகள் பாரபட்சமாக உள்ளது. எனவே அந்த அறிக்கையை திரும்ப பெற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மாவட்டங்களுக்கான கடன் விவகாரத்தில் ஆர்பிஐ கொள்கை முற்றிலும் தவறானது. அதிகளவில் கடன் ஏற்கனவே பெற்றிருந்தாலும், உரிய நேரத்தில் திருப்பி செலுத்திய தமிழகத்தை ஆர்பிஐ குறைத்து மதிப்பீடுகிறது. தமிழகத்தில் உள்ள மாவட்டங்களுக்கு கடன் அளிப்பதை குறைத்து கொள்ளும் முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும். பழைய நடைமுறையையே தொடர வேண்டும் என்று குறிப்பிட்டு உள்ளார்.

முன்னதாக முன்னுரிமை கடன் பிரிவில் புதிய திருத்தங்களை ரிசர்வ் வங்கி அண்மையில் வெளியிட்டது. அதில், ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கு ரூ50 கோடி வரை வங்கிகள் கடனுதவி வழங்கலாம். பாசன பம்ப் செட்டுகளின் மின் உற்பத்திக்கான சோலார் மின் உற்பத்தி ஆலை அமைத்தல் மற்றும் பயோ காஸ் ஆலை நிறுவ கடன் வழங்குவதும் முன்னுரிமை கடன் பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளன.

சிறு, குறு விவசாயிகளுக்கு கடன் வழங்கும் இலக்கு படிப்படியாக உயர்த்தகப்படும். ஏற்கெனவே நிர்ணயம் செய்யப்பட்ட விலையில் வேளாண் உற்பத்தி பொருட்களை சந்தைப்படுத்தும் நிறுவனங்களின் வேளாண் பணிகளுக்கு கடன் வழங்குதல், புதுப்பிக்கத்தக்கவல்ல எரிசக்திக்கான கடன், சுகாதார உள்கட்டமைப்புக்கான கடன் வரம்புகள் இரட்டிப்பு ஆகியவை ரிசர்வ் வங்கியின் புதிய விதிகளில் சேர்க்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.