சென்னை

ரடங்கில் மேலும் தளர்வுகள் அறிவிப்பது குறித்து இன்று தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் ஆலோசனை நடத்த உள்ளார்.

இரண்டாம் அலை கொரோனா பரவலால் தமிழகத்தில் கடும் பாதிப்பு ஏற்பட்டது.  இதையொட்டி தமிழக அரசு அறிவித்திருந்த ஊரடங்கு கடுமையாக்கப்பட்டுத் தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு அமலானது.  இதனால் தமிழகத்தில் சிறிது சிறிதாகப் பாதிப்புக்கள் குறைந்து தற்போது ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

முதலில் தமிழக மாவட்டங்கள் கொரோனா பாதிப்பு அடிப்படையில் மூன்று பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு வெவ்வேறு விதமான ஊரடங்கு அறிவிக்கப்பட்டன.  தற்போது மாநிலம் எங்கும் ஒரே விதமான ஊரடங்கு அமலில் உள்ளது.  தற்போது தளர்வுகள் அறிவிக்கப்பட்ட போதிலும் மதுபான கூடங்கள் மற்றும் திரையரங்குகள் இயங்கவில்லை.

இந்நிலையில் தமிழகத்தில் மேலும் ஊரடங்கைத் தளர்த்துவது குறித்து இன்று முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை நடத்த உள்ளார்.   இன்று காலை தலைமைச் செயலகத்தில் காலை 10.30 மணிக்கு நடைபெற உள்ள ஆலோசனைக் கூட்டத்தில் தலைமைச் செயலாளர், பொதுத்துறை மற்றும் வருவாய்த்துறைச் செயலர்கள் உள்ளிட்ட பல அதிகாரிகள் கலந்து கொள்கின்றனர்.