சென்னை

காப்பிரைட் சட்டத்தினால் தமிழ்நாடு பேருந்துகளில் இனி பாடல்கள் மற்றும் திரைப்படங்கள் ஒளிபரப்பு கிடையாது என தமிழ்நாடு பேருந்து உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.

தனியார் பேருந்துகளில் திரைப்படங்கள் மற்றும் திரைப்பாடல்கள் ஒலிபரப்பப் படுவது பல நாட்களாக நிகழ்ந்து வரும் செயல் ஆகும்.  அதிலும் பெரும்பாலான பேருந்துக்களில் திருட்டு விசிடி எனப்படும் பைரேட் செய்யப்பட்ட புதிய படங்கள் ஒளிபரப்பப்படுகின்றன.

கடந்த மே மாதம் பெங்களுருவில் இருந்து சென்னை வந்த பேருந்து ஒன்றில் விஜய் நடித்த “தெரி” திரைப்படம் திரையிடப் பட்டது.  இதைப் பார்த்துக் கொண்டிருந்த பயணி ஒருவர் நடிகர் சங்கத் தலைவர் விஷாலுக்கு அலைபேசி மூலம் தகவல் அளித்து அந்த திரைப்படம் ஒளிபரப்புவதையும் படம் எடுத்து அனுப்பி வைத்தார்.  சென்னை மதுரவாயல் அடைந்ததும் அந்த பேருந்தின் ஓட்டுனர் கைது செய்யப்பட்டார்.   அதன் பிறகு ஒரு வாரம் கழித்து சூர்யா நடித்த “24” படத்தை ஒளிபரப்பியதற்காக திண்டுக்கல்லில் இருந்து சென்னை வந்த பேருந்து ஓட்டுனர் கைது செய்யப்பட்டார்.

இது குறித்து ஓட்டுனர்கள், தமிழ்நாடு பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தில் புகார் அளித்துள்ளனர்.   அவர்கள் தங்களுக்கு எந்த திரைப்படத்துக்கு ஒளிபரப்பு உரிமை அளிக்கப்பட்டுள்ளது என்னும் காப்பிரைட் பற்றி ஒன்றும் தெரியாது என்பதால் சட்ட பூர்வமான திரைப்படங்களை ஒளிபரப்பவும் தயக்கமாக உள்ளதாக தெரிவித்தனர்.  இது குறித்து தமிழ்நாடு பேருந்து உரிமையாளர்கள் சங்கம் ஒரு கூட்டம் நடத்தியது.

அந்தக் கூட்டத்தின் முடிவில், “காப்பிரைட் சட்டத்தின் படி சில படங்கள் மற்றும் பாடல்களை பேருந்துகளில் ஒளிபரப்ப இயலவில்லை.   ஒட்டுனர்கள் மட்டும் அல்ல எங்களுக்கு எந்த எந்த படங்கள் அல்லது பாடல்களுக்கு காப்புரிமை சட்டத்தின் கீழ் அனுமதி வழங்கப்பட்டது என்பது தெரியவில்லை.  அதனால் இனி பேருந்துகளில் எந்தத் திரைப்படமும் ஒளிபரப்ப மாட்டாது எனவும் பாடல்களும் ஒலிபரப்பப் பட மாட்டாது எனவும் முடிவு செய்துள்ளோம்.   வரும் டிசம்பர் 31ஆம் தேதிக்குள் அனைத்து பேருந்துகளிலும் உள்ள தொலைக்காட்சிப் பெட்டிகள், ஒலிபெருக்கிகள் ஆகியவை அனைத்தும் நீக்கப்படும்” என அறிவிக்கப்பட்டுள்ளது.