சென்னை

ந்த 2018-19 ஆம் ஆண்டுக்கான தமிழக அரசின் நிதிநிலை அறிக்கையை வரும் 15ஆம் தேதி துணை முதல்வர் ஓ பன்னீர் செல்வம் தாக்கல் செய்திறார்.

கடந்த மாதம் தமிழக அமைச்சரவைக் கூட்டம் சென்னை தலைமை செயலகத்தில் கூடியது.   அப்போது நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்வது குறித்து ஆலோசனை நடைபெற்று முடிவுஎடுக்கப்பட்டது.   இன்று காலை அந்தக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து சட்டப் பேரவை செயலாளர் சீனிவாசன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அந்த அறிக்கையில், “தமிழக சட்டப்பேரவையின் அடுத்த கூட்டம் வரும் 15ஆம் தேதி வியாழக்கிழமை பேரவைத் தலைவர் தனபால் கூட்ட உள்ளார்.    அன்று காலை 10.30  மணிக்கு துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் தமிழக அரசின் 2018-19ஆம் ஆண்டுக்கான நிதி நிலை அறிக்கையை தாக்கல் செய்வார்.    அதன் பிறகு அலுவல் ஆய்வுக் கூட்டம் நடைபெறும் அந்த கூட்டத்தில் நிதிநிலை அறிக்கை மீதன விவாதம் எத்தனை நாட்கள் நடத்த வேண்டும் என்பது குறித்து முடிவு எடுக்கப்படும்” என தெரிவிக்கப் பட்டுள்ளது.

தலைமைச் செயலக அதிகாரிகள் அனேகமாக இந்தக் கூட்டத் தொடர் ஒரு மாத காலம் நடைபெறலாம் என தெரிவித்துள்ளனர்.    நிதிநிலை அறிக்கை கூட்டம் முடிவடைந்ததும் தமிழக உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும் என எதிர்பார்க்கப் படுவதால் இந்த நிதிநிலை அறிக்கையில் பல சலுகைத் திட்டங்கள் அறிவிக்கப்பட வாய்ப்புள்ளதாக அதிகாரபூர்வமற்ற தகவல்கள் தெரிவிக்கின்றன.