சென்னை

மிழகபாஜகவினர் மீண்டும் ஊடக விவாதங்களில் பங்கேற்க உள்ளதாக அக்கட்சித் தலைவர் அண்ணாமலை அறிவித்துள்ளார்.

ஊடகங்களில் தினசரி தமிழகத்தில் நடக்கும் நிகழ்வுகள் மற்றும் அரசியல் தொடர்பாக விவாதம் நடத்தப்படுகிறது. இவற்றில் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள், சமூக ஆர்வலர்கள் மற்றும் துறை சார்ந்த வல்லுநர்கள் பங்கேற்று தங்கள் வாதங்களை முன்வைக்கின்றனர். ஒரு சில சமயம் இந்த வாதங்கள் எல்லை மீறி ஒருவருக்கொருவர் மரியாதைக்குறைவான வார்த்தைகளால் பேசுவதும் அரங்கேறியிருக்கிறது.

மேலும் விவாதங்களின்போது, சில கட்சிகள் தங்கள் தரப்பு கருத்தைத் தெரிவிக்க ஊடகங்கள் சரியாக வாய்ப்பு வழங்குவதில்லை என்ற குற்றச்சாட்டும் முன்வைக்கப்படுகிறது. தமிழக பாஜக ஊடக விவாதங்களில் சமநிலையும், சமவாய்ப்பும் இல்லை என்று கூறி, ஊடக விவாதத்தில் பங்கேற்பதை நிறுத்தியது.

அப்போதைய மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கடந்த 2019ம் ஆண்டு இதனை அறிவித்தார். தற்போது தமிழக பாஜக மீண்டும் ஊடக விவாதங்களில் பங்கேற்க முடிவு செய்துள்ளது.  பாஜக தலைவர் அண்ணாமலை அக்கட்சியின் மாநில துணைத் தலைவர் கரு. நாகராஜனை ஊடக பிரிவின் மாநில பார்வையாளராகவும், ஊடக விவாதங்கள் மற்றும் பத்திரிகையாளர் சந்திப்பு ஒருங்கிணைப்பாளராகவும் நியமித்து அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

ஊடக விவாதங்கள் மற்றும் பத்திரிகையாளர் சந்திப்பில் தமிழக பாஜக சார்பாகப் பங்கேற்கும் மாநில நிர்வாகிகள் பட்டியலையும் அவர் வெளியிட்டுள்ளார்.  பட்டியலில், பொன் ராதாகிருஷ்ணன், எச்.ராஜா, நயினார் நாகேந்திரன், வானதி சீனிவாசன், வி.பி.துரைசாமி, கே.பி.ராமலிங்கம், கே.எஸ்.நரேந்திரன், சசிகலா புஷ்பா, நாராயணன் திருப்பதி உள்ளிட்ட 30 நிர்வாகிகளின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன.