சென்னை: அரியர் தேர்வு நடத்த அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம் முடிவு செய்துள்ளது.

தமிழகத்தில் கொரோனா தொற்றின் காரணமாக, அரியர் தேர்வு எழுத தேர்வுக் கட்டணம் செலுத்திய மாணவர்கள் அனைவரையும் தேர்ச்சி என்று தமிழக அரசு அறிவித்திருந்தது.

எம்பிபிஎஸ் மாணவர்கள் தவிர மற்ற பட்டப்படிப்புகளில் அரியர் வைத்துள்ள மாணவர்கள் அனைவரும் தேர்வின்றி தேர்ச்சி பெறுவதாக தமிழக அரசு தெரிவித்தது. ஆனால் சட்டப் பல்கலைக்கழகம் மற்றும் அதன் கீழ் உள்ள சட்டக் கல்லூரிகளில் அரியர் வைத்துள்ள மாணவர்களுக்கு தேர்ச்சி வழங்கும் முடிவு நிறுத்தி வைக்கப்படுவதாக அம்பேத்கர் பல்கலைக்கழகம் அறிவித்திருந்தது.

இது தொடர்பாக பல்கலைக்கழக பதிவாளர் ஆபிரஹாம் அனைத்து சட்டக் கல்லூரிகளுக்கும் சுற்றறிக்கை ஒன்றை அனுப்பி இருந்தார். இந்நிலையில், அரியர் தேர்வு நடத்த அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம் முடிவு செய்துள்ளது. இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பும், தேர்வுகால அட்டவணையும் ஒரு சில நாட்களில் வெளியாகும் என்று தெரிகிறது.