கொல்கத்தா

வாக்களிப்பவர்களின் விரலை முகர்வது மூலம் தங்களுக்கு வாக்களித்தனரா என்பதை திருணாமுல் காங்கிரஸ் கண்டறிய உள்ளதாக தகவல்கள் வந்துள்ளன.

நேற்று மக்களவை தேர்தலின் நான்காம் கட்ட வாக்குப் பதிவு 9 மாநிலங்களில் நடந்து முடிந்துள்ளது. இதில் மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள சில தொகுதிகளுக்கும் வாக்குப் பதிவு நடந்தது. இந்த மாநிலத்தில் பாஜக மற்றும் திருணாமுல் காங்கிரஸ் ஆகிய இரு கட்சிகளும் பல விதி மீறல்களில் ஈடுபட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அசன்சோல் தொகுதி பாஜக வேட்பாளர் மீது வழக்கு பதிய தேர்தல் ஆணையம் காவல்துறைக்கு உத்தரவிட்டுள்ளது.

மேற்கு வங்க மாநிலத்தில் புகழ் பெற்ற வங்க பத்திரிகை அனந்த பசார் ஆகும். இந்த பத்திரிகையில் நேற்று ஒரு செய்தி வெளியாகி உள்ளது. அதில், “மின்னணு வாக்கு பதிவு இயந்திரத்தில் திருணாமுல் காங்கிரஸ் கட்சியின் சின்னத்தின் மீது வாசனை திரவியங்களை அக்கட்சியினர் தெளித்து வைத்துள்ளனர்.

இதனால் அந்த கட்சிக்கு வாக்களிப்பவர் விரலில் அந்த திரவியம் ஒட்டிக் கொள்ளும். அவ்வாறு வாக்களித்து விட்டு வருபவர்கள் விரலை கட்சியினர் முகர்ந்து பார்க்கின்றனர். விரலில் அந்த வாசனை திரவியத்தின் வாசனை அடித்தால் தங்கள் கட்சிக்கு அவர்கள் வாக்களித்ததை உறுதி செய்கின்றனர். ” என குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த செய்தி அங்கு மிகவும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. திருணாமுல் காங்கிரஸ் கட்சி இது பொய்யான தகவல் எனக் கூறி இதை மறுத்துள்ளது.

இது குறித்து பாஜக தலைவர் ஷிஷிர் பஜோரியா, “இது இந்த கட்சிக்கு புதிது கிடையாது. இதைப் போல பல வேலைகளை திருணாமுல் காங்கிரஸ் செய்து வருகிறது. தாங்கள் வாக்காளர்களால் புறக்கணிக்கப் படுவோம் என்னும் பயத்தினால் வாக்காளர்களை மிரட்ட இவ்வாறு செய்துள்ளது” என தெரிவித்துள்ளார்.