திருவாரூர்: காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளித்துவந்த சட்டப்பிரிவு 370 நீக்கம் குறித்து விவாதித்த காரணத்திற்காகவே, திருவாரூர் மத்திய பல்கலைக்கழகத்தின் 31 மாணாக்கர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுப்பதற்கான நோட்டீஸ் அனுப்பியுள்ளது பல்கலை நிர்வாகம்.

இதுதொடர்பாக கூறப்படுவதாவது; சிவில் சர்வீஸ் தேர்வின் மீது ஆர்வம் கொண்ட 31 பேர் அடங்கிய மாணாக்கர் குழாம் ஒன்று, எப்போதுமே வாரம்தோறும் நாட்டின் நடக்கும் விஷயங்கள் குறித்து பொதுஅறிவை வளர்த்துக்கொள்ளும் வகையில் விவாதங்களை மேற்கொள்ளும். இது அங்கே வழக்கமாக நடக்கும் ஒரு நிகழ்வு.

அந்த வகையில்தான், சட்டப்பிரிவு 370 குறித்தும் அதன் வரலாறு குறித்தும் விவாதம் செய்துள்ளார்கள் அந்த மாணாக்கர்கள். ஆனால், அவர்களின் இந்த செயல் விதிமுறைகளுக்கு மாறானது என்று கூறி, அவர்களுக்கு மெமோ அளித்து, ஏன் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கக்கூடாது என்ற கேள்வியும் கேட்கப்பட்டுள்ளது.

ஆனால், மத்திய அரசின் நடவடிக்கையை ஆதரித்து ஏபிவிபி அமைப்பினர், பல்கலை வளாகத்திற்குள் இனிப்பு வழங்கி கொண்டாட்டமே நடத்தினர். ஆனால், அவர்களின் மீது எந்தவித நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. பல்கலைக்கழகத்தின் ஒருசார்பான மற்றும் கருத்து சுதந்திரத்தை நசுக்கும் செயல் இதுவென்று விமர்சனங்கள் எழுந்துள்ளன.