சென்னை: பொதுமக்களுக்கு தரமான சேவைகளை வழங்க இயலாமல், அரசுக்கு வருவாயையும் ஈட்டித்தர முடியாமல் இருக்கும் அரசு போக்குவரத்துக் கழகங்கள் குறித்து விமர்சனம் செய்துள்ள சென்னை உயர்நீதிமன்றம், அரசு போக்குவரத்து கழகங்களை, அரசு – தனியார் பங்களிப்பு முறையிலான அமைப்பாக மாற்ற முடியுமா? என்ற கேள்வியையும் எழுப்பியுள்ளது.

இந்த விஷயத்தில், உயர்நீதிமன்றம் தானே முன்வந்து போக்குவரத்துத் துறை செயலாளரையும் உள்ளிழுத்துள்ளது.

அரசுப் பேருந்தினால் உயிரிழந்த நபரின் குடும்பத்திற்கான இழப்பீட்டுத் தொகையை உயர்த்தி வழங்குமாறு தொடுக்கப்பட்ட வழக்கை விசாரிக்கையில் நீதிமன்றம் இவ்வாறு கேள்வி எழுப்பியுள்ளது.

தனது போக்குவரத்துக் கழகங்களை தனியார் மயமாக்குவதற்கு அரசு விரும்புகிறதா? என்று கேள்வியெழுப்பிய நீதிமன்றம், தொழிலாளர் யூனியன்களின் கடுமையான போராட்டங்கள் குறித்தும் கேள்வி எழுப்பியதோடு, பலாபலன்களை அதிகரிக்கும் வகையில், நிபுணர்களை நியமிப்பது குறித்தும் அரசிடம் கேட்டுள்ளது.