திருப்பூர்:

தமிழகத்தின் டெக்ஸ்டைல்ஸ் நகரமான திருப்பூரில் பல தொழிலதிபர்கள் வெற்றி கண்டுள்ளனர். வெற்றி கண்டு பிரகாசிப்பவர்களை மட்டுமே நாம் பார்த்து இருக்கிறோம். ஆனால், அதே சமயம் இதே திரூப்பரில் பலர் தோல்வியை தழுவி தற்கொலை செய்து கொள்ளும் நிலைக்கு தள்ளப்படும் சம்பவங்களும் நடந்து வருகிறது.

இந்த வகையில் சுகந்தி என்ற 31 வயது பெண் தொழில் முனைவோர் கடந்த 2 வருடங்களுக்கு முன்பு மைக்ரோ கார்மென்ட் தொழிற்சாலையை அங்கேரிபாளையம் வெங்கமேட்டில் தொடங்கினார். லட்சியத்துடன் கூடிய கடின உழைப்பாளி. ஆனால், ஒரு நாள் தன்னிடம் செல்போன் ரீசார்ஜ் செய்வதற்கு கூட பணம் இல்லாத நிலை ஏற்படும் என்று அவர் நினைத்து பார்க்கவில்லை. அந்த நிலை அவருக்கு கடந்த 12ம் தேதி ஏற்பட்டது. இதனால் வாழ்கையில் வெறுப்புற்ற சுகந்தி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

கடந்த 6 மாதங்களில் இந்த துறையில் சுகந்தியோடு சேர்த்து 4 இந்த தொழில் முனைவோர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். திரூப்பூரில் குடியேரிய மிகப்பெரிய மக்கள் தொகை சமூக பொருளாதாரத்தால் பாதிக்கப்பட்டுள்ளது. மாநிலத்தில் தற்கொலை செய்வோரது பட்டியலில் திருப்பூர் எப்போதும் முதலிடத்தை பிடிக்கும். எனினும் டெக்ஸ்டைல்ஸ் துறையில் இதன் எண்ணிக்கை உயர்வது புதிய தொழில் தொடங்குவோருக்கும், ஏற்கனவே தொழில் செய்வோருக்கும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

2008ம் ஆண்டு முதல், உலக பொருளாதாரத்தில் ஏற்பட்ட மந்த நிலை, யான் விலை உயர்வு, சாயப் பட்டறைகள் மூடல், தொழிலாளர் பிரச்னை போன்றவற்றால் டெக்ஸ்டைல்ஸ் துறை மிகவும் பாதித்துள்ளது. ‘‘சர்வதேச சந்தையில் எழுந்துள்ள போட்டி, பணமதிப்பிழப்பு மற்றும் ஜிஎஸ்டி போன்றவை மேலும் இந்த தொழிலை கேள்விகுறியாக்கியுள்ளது’’ என்று தென்னிந்திய உள்ளாடை உற்பத்தியாளர் சங்க துணைத் தலைவர் கோவிந்தப்பன் தெரிவித்தார்.

திருப்பூரில் இருந்த சர்வதேச ஆர்டர்கள் பங்களாதேஷ் மற்றும் வியட்நாமிற்கு சென்றுவிட்டது. பெரிய நிறுவனங்களில் தொழில் வீழ்ச்சி ஏற்பட்டவுடன் சிறிய நிறுவனங்களும் வீழ்ந்துவிட்டன. இது போன்ற நிலை தான் சுகந்திக்கு ஏற்பட்டுள்ளது. பிரச்னையில் சிக்கி தவிக்கும் சிறு நிறுவனங்களுக்கு வங்கிகளும், தனியார் நிதியகங்களும் அதை கழுத்தை நெருக்கும் அளவில் செயல்படுகின்றன. சுகந்தி இறந்த நாள் அன்று அவரது கணவர் பணம் பெற வெளியில் சென்றுவிட்டு வெறுங்கையுடன் திரும்பியுள்ளார்.

இதேபோல் சங்கரடாம்பாளையத்தில் கடந்த ஜனவரி மாதம் மணிகண்டசாமி என்பவர் தற்கொலை செய்துகொண்டார். வங்கிக்கு அதிகளவில் கடன் நிலுவை இருந்துள்ளது. ஆனால் வருவாய் ஈட்டும் வகையில் ஆர்டர் இல்லை. அரசின் கொள்கை தான் மணிகண்டசாமியின் மரணத்துக்கு காரணம் என்று அவரது மனைவி ஸ்ரீவித்யா தெரிவித்துள்ளார். திருப்பூர் எப்போதும் நம்பிக்கையூட்டும் வகையில் தான் இருக்கும். ஆனால் தற்போது தொழில் தோல்வி என்ற நிலை உருவாகிவிட்டது.

இது குறித்து திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்க பொதுச் செயலாளர் விஜயகுமார் கூறுகையில், ‘‘உள்ளாடை தொழிற்சாலை ஏற்கனவே சர்வதேச போட்டியை இழந்து நஷ்டத்தில் உள்ளது. ஜிஎஸ்டி குறைக்கப்படும் என்று மத்திய அரசு உறுதி அளித்து வருகிறது. கச்சா பொருட்களின் விலை குறைக்கப்படும் என்று தெரிவித்தது. ஆனால் இதில் எதுவுமே நடக்கவில்லை’’ என்றார்.

மத்திய, மாநில அரசுகள் திருப்பூர் டெக்ஸ்டைல்ஸ் தொழிற்சாலை பிரச்னைகளுக்கு விரைந்து தீர்வு காணாவிட்டால் தற்கொலைகள் மேலும் அதிகரிக்கும் என்று பலரும் அச்சமடைந்துள்ளனர்.