திருப்பதி லட்டு பிரசாதத்தில் கலப்படம் செய்யப்பட்டதாக வெளியான தகவலை அடுத்து மக்களுக்கு வழங்கப்படும் உணவில் கலப்படம் செய்தது தொடர்பாக சம்பந்தப்பட்டவர்கள் மீது விரைவில் வழக்கு தொடரப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஆந்திராவில் தெலுங்கு தேசம் கட்சியினர் கலந்து கொண்ட கூட்டத்தில் பேசிய அம்மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு, “திருப்பதி தேவஸ்தான லட்டு செய்ய பயன்படும் நெய்யில் கலப்படம் செய்யப்பட்டது தெரியவந்துள்ளது.

நாம் செய்த பாவத்துக்கு தண்டனையை அடுத்த ஜென்மத்தில் இல்லை இதே ஜென்மத்தில் அனுபவிப்போம்.

அதிலும் கிருஷ்ணரின் அவதாரம் என வணங்கப்படுபவரிடம் வேலைகாட்டியவர்கள் அதற்கான தண்டனையை கண்டிப்பாக அனுபவிப்பார்கள்.

திருப்பதி பாலாஜியின் தயவால் தெலுங்கு தேசம் கட்சி மீண்டும் ஆட்சிக்கு வந்துள்ளதால் இந்த விவகாரம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

போதுமான ஆதாரம் கிடைத்தவுடன் இதில் தொடர்புடையவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும்” என்றும் “லட்டு பிரசாதத்தின் ஹெரிடேஜ்… பாரம்பரியம்… கெட்டு விட்டதாகவும், மீண்டும் அதன் ஹெரிடேஜ் நிலை நிறுத்தப்படும்” என்றும் பேசினார்.

தெலுங்கு தேசம் கட்சியினரிடையே பேசிய இவரது இந்த பேச்சு அடங்கிய வீடியோவை அக்கூட்டத்தில் கலந்து கொண்ட சந்திரபாபு நாயுடுவின் மகனும் ஆந்திர அமைச்சருமான நாரா லோகேஷ் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டார்.

திருப்பதி லட்டு பிரசாதத்தில் கலப்படம் குறித்த ஆந்திர முதல்வரின் பேச்சு வைரலானதை அடுத்து இதை நிரூபிக்கும் விதத்தில் கடந்த ஜூலை மாதம் திருப்பதி தேவஸ்தானத்தில் இருந்து எடுக்கப்பட்ட நெய் மாதிரி மீதான சோதனை முடிவு அறிக்கையும் வெளியானது.

அதில், நெய்யில் விலங்கு கொழுப்பு சேர்க்கப்பட்டதற்கான ஆதாரம் இருப்பதாகக் கூறப்பட்டதை அடுத்து புரட்டாசி மாத பிரமோற்சவத்துக்காக திருமலையில் காத்திருந்த லட்சக்கணக்கான பக்தர்களின் அடிவயிற்றை கலக்கியது.

இதனைத் தொடர்ந்து இந்த விவகாரம் ஆந்திர அரசியலில் அனைவரின் முகம் சுழிக்க வைத்து வரும் நிலையில் இது குறித்து சிபிஐ விசாரணை வேண்டும் என்று ஆந்திர மாநில எதிர்க்கட்சிகள் கோரிக்கை வைத்துள்ளன.

உலகம் முழுக்க கோடிக்கணக்கான மக்களால் விரும்பி சுவைக்கப்படும் திருப்பதி லட்டு பிரசாதம் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் உள்ள திருப்பதி தேவஸ்தானத்துக்கு சொந்தமான கோயில்களில் விற்பனை செய்யப்படுகிறது.

இந்த நிலையில் லட்டு பிரசாதத்தில் கலப்படம் செய்யப்பட்டது பரிசோதனை அறிக்கை மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளதை அடுத்து உணவு பாதுகாப்பு சட்டப்படி திருப்பதி தேவஸ்தானம் மீது பொதுநல வழக்கு தொடரப்பட வாய்ப்பு இருப்பதாகக் கூறப்படுகிறது.

 

திருப்பதி லட்டு : கலப்பட நெய் விவகாரம்… சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட கோரிக்கை