திருப்பதி

திருப்பதி மலைப்பாதை பழுது பார்க்கப்பட்டும் வரும் 10 ஆம் தேதி முதல் பயன்பாட்டுக்கு வருவதாக தேவஸ்தானம் அறிவித்துள்ளது.

கடந்த டிசம்பர் 1 ஆம் தேதி கனமழை காரணமாகத் திருப்பதியில் இருந்து திருமலை செல்லும் 2 ஆம் மலைப்பாதையில் நிலச்சரிவு ஏற்பட்டது.   பாறைகள் உருண்டு விழுந்ததால் வாகனங்கள் செல்ல முடியாத அளவுக்குப் பாதையில் 4 இடங்கள் முழுமையாகச் சேதம் அடைந்தது.

இவ்வாறு சாலை பாதிப்பு கடந்த 30 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு ஏற்பட்டதால் பக்தர்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர்.   தேவஸ்தான அதிகாரிகள் போர்க்கால அடிப்படையில் பாதையில் போக்குவரத்தை நிறுத்தி மாற்றுப்பாதையில் பக்தர்களை அனுப்பி வருகிறது.  சாலை சீரமைப்பு பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது.

இதுவரை நிலச் சரிவு ஏற்பட்ட பகுதியின் பக்கச் சுவர் கட்டி முடிக்கப்பட்டுள்ளது  மற்ற பணிகளும் முடிவடையும் தறுவாயில் உள்ளது.   தேவஸ்தான தலைமைப் பொறியாளர் அனைத்து பணிகளும் விரைவில் முடிக்கப்பட்டு வரும் 10 ஆம் தேதி முதல் இந்த மலைப்பாதை மீண்டும் பக்தர்கள் பயன்பாட்டுக்குக் கொண்டு வரப்படும் என அறிவித்துள்ளார்.