திருப்பதி

ரும் அக்டோபர் 7ஆம் தேதி முதல் 15 ஆம் தேதி வரை திருமலையில் நடைபெறும் பிரம்மோற்சவத்துக்குப் பக்தர்களுக்கு அனுமதி இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு ஆண்டும் புரட்டாசி மாதத்தில் திருப்பதி கோவிலில் பிரம்மோற்சவம் நடத்தப்படும். அப்போது காலை, இரவு ஆகிய இரு வேளைகளிலும் உற்சவர்களான ஸ்ரீதேவி, பூதேவி சமேதமாய் மலையப்பர் பல்வேறு வாகனங்களில் 4 மாட வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலிப்பார்.  இந்த  பிரம்மோற்சவ விழாவைக் காண ஆயிரக்கணக்கான மக்கள் குவிவார்கள்.

நேற்று காலை திருமலையில் உள்ள அன்னமைய்யா பவனில், திருப்பதி தேவஸ்தானத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ஜவகர் ரெட்டியின் தலைமையில் அனைத்து துறை அதிகாரிகளின் ஆலோசனைக் கூட்டம் நடந்தது.

அதைத் தொடர்ந்து  ஜவகர் ரெட்டி,  ”கொரோனா  3-ம் அலை பரவக்கூடாது என்பதால், இம்முறையும் பிரம்மோற்சவத்தை பக்தர்கள் இன்றி நடத்துவது என முடிவெடுக்கப்பட்டுள்ளது.

ஆகவே வாகன சேவைகள் ரத்து செய்யப்படுகின்றது.  தினசரி காலையும் மாலையும் கோயிலுக்குள்ளேயே அந்தந்த வாகனங்களில் உற்சவ மூர்த்திகள் எழுந்தருள்வர்.  அக்டோபர் மாதம் 7-ம் தேதி கொடியேற்றமும், அன்றிரவு பெரிய வாகன சேவையும் நடைபெறும்.

முக்கிய வாகன சேவைகளான கருட வாகன சேவை அக்டோபர் மாதம் 11-ம் தேதியும், 12-ம் தேதி தங்க தேர்த்திருவிழாவும், 14-ம் தேதி தேர்த்திருவிழாவும், நிறைவு நாளான 15-ம் தேதி காலை சக்கர ஸ்நானமும், அன்று மாலை கொடியிறக்க நிகழ்ச்சியும் நடைபெறும்” எனத் தெரிவித்துள்ளார்.