திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி தொகுதிக்கு உட்பட்ட திருமால்பாடி அரங்கநாதர் கோயில் புனரமைக்கும் பணி இந்த ஆண்டு நடைபெறும்.
தெள்ளார் ஒன்றியத்திற்கு உட்பட்ட திருமால்பாடி கிராமத்தில் அமைந்துள்ள அரங்கநாதர் கோயில் ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்தது.
பராந்தக சோழன், ராஜராஜ சோழன், விக்ரம சோழன் என சோழ அரசர்கள் பலரும் இந்த கோயிலுக்கு திருப்பணி செய்துள்ளனர்.
தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள சீயமங்கலம் குகைக்கோயிலுக்கு அருகில் உள்ள இந்த அரங்கநாதர் திருக்கோயில் வரலாற்று சிறப்பு மிக்கது.
கடந்த சில ஆண்டுகளாக பராமரிப்பு இன்றி காணப்படும் இந்த கோயிலை புனரமைத்து குடமுழுக்கு நடத்த வேண்டும் என்று வந்தவாசி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் எஸ். அம்பேத்குமார் சட்டமன்றத்தில் கோரிக்கை வைத்தார்.
இதற்கு பதிலளித்த இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு உறுப்பினரின் கோரிக்கையை பரிசீலிப்பதாகவும் இந்த நிதியாண்டில் இதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்றும் உறுதியளித்தார்.