சென்னை: செந்தூர் முருகன் கோவிலில் நாளை சூரசம்ஹாரம் நடைபெற உள்ளதால், இதை காண ஏராளமான பக்தர்கள் சென்னை உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்து நெல்லை செல்வார்கள் என்பதால், தெற்கு ரயில்வே சிறப்பு ரயிலை இன்று இரவு இயக்குவதாக அறிவித்து உள்ளது.

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கந்தசஷ்டி திருவிழா டைபெற்று வருகிறது. விழாவின் சிகர நிகழ்ச்சியாக நாளை கடற்கரையில்  சூரசம்ஹாரம் நாளை நடைபெற உள்ளது. இதையொட்டி பல லட்சம் பேர் செந்தூரில் குவிவார்கள் என்பதால், பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. கந்த சஷ்டி திருவிழாவை முன்னிட்டு தற்போதே பல  ஆயிரக்கணக்கான பக்தர்கள் திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியத் தொடங்கியுள்ளனர்.

இந்த நிலையில், , பக்தர்கள் வசதிக்காக சென்னையில் இருந்து இன்று இரவு சிறப்பு ரயிலும் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.  அதன்படி, சென்னை எழும்பூரில் இருந்து இன்று இரவு 11.55 மணிக்கு இந்த ரயில் புறப்படும் எனவும் நெல்லை வரை இந்த ரயில் இயக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல் சிறப்புக் கட்டணத்தில் இயக்கப்படும் இந்த ரயில், சூரசம்ஹாரம் முடிந்த பிறகு நாளை 18.11.2023 இரவு 10.11 மணிக்கு திருச்செந்தூரில் இருந்து தாம்பரத்திற்கு புறப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருச்செந்தூரில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருக்கும் என்பதால் இன்று நாளையும் திருச்செந்தூரில் போக்குவரத்திலும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. வாகன நிறுத்தும் இடங்கள் மற்றும் விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன.

திருவிழாவிற்கு வரும் பக்தர்கள் தங்கள் வாகனங்களில் சிரமமின்றியும், போக்குவரத்து நெரிசலின்றியும், பாதுகாப்பாக வந்து செல்லும் வகையில், சில வழிப்பாதைகள் ஒருவழிப்பாதையாக மாற்றப்பட்டு உள்ளது.

பக்தர்கள் தங்கள் வாகனங்களை பாதுகாப்பாக நிறுத்துவதற்கு தூத்துக்குடி சாலையில் 5 வாகன நிறுத்துமிடங்களும், நெல்லை சாலையில் 6 வாகன நிறுத்துமிடங்களும், பரமன்குறிச்சி சாலையில் 4 வாகன நிறுத்துமிடங்களும் மற்றும் திருச்செந்தூர் டி.பி. சாலையில் ஒரு வாகன நிறுத்துமிடமும் சேர்த்து மொத்தம் 16 வாகன நிறுத்துமிடங்கள் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளன.