சென்னை:  திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் தரிசன கட்டணங்களை பல மடக்கு அறநிலையத்துறை திடீரென உயர்த்தி விவகாரம் சர்சையை ஏற்படுத்திய நிலையில், அமைச்சர் சேகர்பாபு இது வதந்தி என கூறினார். ஆனால், அங்கு கட்டண கொள்ளை நடைபெற்று வருகிறது என பக்தர்கள் தொடர்ந்து குற்றம் சாட்டி வந்த நிலையில், அதற்கான ஆவணங்களை பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதன் மூலம் அமைச்சர் சேகர்பாபு கூறிய பொய் அம்பலமாகி உள்ளது.


திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் தரிசன கட்டணங்களை, இந்து சமய அறநிலையத்துறை பல மடங்கு உயர்த்தியுள்ளது என்று பாஜக எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் குற்றம் சாட்டியது,.ன தொடர்பான ஆவணங்களையும் அவர் வெளியிட்டுள்ளார்.

திருச்செந்தூரில் தரிசன கட்டணத்தை ரத்து செய்யக்கோரி கோயில் அலுவலகம் முன்பு போராட்டம் நடத்திய 200 பேர் கைது செய்யப்பட்டனர். இதனால் அங்கு பதற்றம் நிலவி வரகிறது.

இதுகுறித்து வானதி சீனிவாசன் வெளியிட்ட அறிக்கையில் , திருச்செந்தூர் முருகன் கோயில் தரிசன கட்டண உயர்வை ரத்து செய்ய வேண்டும். முருகப் பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான, திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் ஆண்டுதோறும் நடைபெறும், ‘கந்த சஷ்டி விழா’ புகழ் பெற்றது. உலகெங்கும் இருந்து பல லட்சக்கணக்கான முருகப் பக்தர்கள் இதற்காக திருச்செந்தூர் வருவார்கள். கந்த சஷ்டியின் 6 நாட்களும் எதுவும் சாப்பிடாமல் தண்ணீர் மட்டுமே அருந்தி விரதம் இருக்கும் பல்லாயிரக்கணக்கான பக்தர்களும் இக்கோயிலில் தங்குவார்கள்.

இந்த ஆண்டுக்கான கந்த சஷ்டி திருவிழா கடந்த 13-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. கந்த சஷ்டியின் முக்கிய நிகழ்வான ‘சூரசம்ஹாரம்’ வரும் 18-ம் தேதி நடைபெறவுள்ளது. இந்நிலையில், திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் தரிசன கட்டணங்களை, இந்து சமய அறநிலையத்துறை பல மடங்கு உயர்த்தியுள்ளது. ரூ. 100 ஆக இருந்த விஸ்வரூப தரிசன கட்டணம் ரூ. 2,000 ஆகவும், ரூ. 100 ஆக இருந்த சிறப்பு தரிசன கட்டணம் ரூ. 1,000 ஆகவும், ரூ. 500 ஆக இருந்த அபிஷேக கட்டணம் ரூ. 3,000 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளன. இது முருகப் பக்தர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. கடவுளை தரிசிக்க ஆயிரக்கணக்கில் கட்டணம் வசூலிப்பது பெரும் அநீதி.

பக்தர்கள் மீது தொடுக்கப்படும் தாக்குதல். பண்டிகைகள், திருவிழா காலங்களில் தனியார் பேருந்துகள், தனியார் வணிக நிறுவனங்கள் பல மடங்கு கட்டணங்களையும், விலையையும் உயர்த்தி மக்களிடம் முடிந்த அளவுக்கு கொள்ளை அடிக்கின்றன. எனவே, ஆயிரக்கணக்கில் கட்டணம் உயர்வை ரத்து செய்ய வேண்டும். ஏழை, எளிய மக்கள் இலவசமாக தரிசிக்கும் வகையில் ஏற்பாடுகளை, திருச்செந்தூர் கோயில் நிர்வாகமும், இந்து சமய அறநிலைத்துறையும் செய்ய வேண்டும். லட்சக்கணக்கில் பக்தர்கள் குவியும் திருச்செந்தூரில் கழிவறைகள், சுகாதாரமான குடிநீர் வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்துதர வேண்டும்” என்றார்.


முன்னதாக இதுகுறித்து விளக்கமளித்த இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு, “திருச்செந்தூர் முருகன் கோவிலில் கந்த சஷ்டி விழா தொடங்கியுள்ளது. சூரசம்காரம் நடைபெற உள்ளது. கோவிலில் விஸ்வரூப தரிசன கட்டணம் ரூ.500-ல் இருந்து 2000 ஆகவும். அபிஷேக கட்டணம் ரூ.500-ல் இருந்து 2000 ஆகவும் கடந்த 2018ம் ஆண்டு அ.தி.மு.க. ஆட்சியில் உயர்த்தப்பட்டது. ரூ.100 தரிசன கட்டணம் எப்போதும் போல் அமலில் உள்ளது. வெளிநாட்டினர், வெளிமாநிலத்தவர்கள் சிறப்பு தரிசன கட்டணத்தில் ஏமாற்றப்படுகிறார்கள். இதனை தடுக்க ரூ.800 சிறப்பு தரிசன கட்டணம் அமலில் உள்ளது. இது தற்போது ரூ.1000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இதற்காக அறங்காவலர் குழு தீர்மானம் நிறைவேற்றியது. பக்தர்களிடம் ஆட்சேபனை குறித்து முன்னறிவிப்பு விளம்பரம் செய்யப்பட்டது. அனைத்து முன்மொழிவுகளும் பெற்ற பிறகு சிறப்பு தரிசன கட்டணத்தில் ரூ.200 கூடுதலாக உயர்த்தப்பட்டுள்ளது.

இதில் அரசியல் செய்ய முயற்சிக்கிறார்கள். வேறு எதையும் கண்டுபிடிக்க முடியாதவர்கள் இந்த ஆண்டு புதிதாக திருச்செந்தூர் கோவிலில் கட்டணம் உயர்த்தப்பட்டதாக விஷம பிரசாரம் செய்து வருகிறார்கள். இதனை பக்தர்கள் நம்ப மாட்டார்கள்” என்றார்

இந்த சூழலில் திருச்செந்தூரில் தரிசன கட்டணத்தை ரத்து செய்யக்கோரி கோயில் அலுவலகம் முன்பு பக்தர்கள் போராட்டம் நடத்தினார்கள். இந்து முன்னணி மாநில துணைத்தலைவர் வி பி ஜெயக்குமார், மாநில பொதுச் செயலாளர் டாக்டர் அரசு ராஜா, மாநில செயலாளர் வழக்கறிஞர் குற்றாலநாதன், மாநில நிர்வாக குழு உறுப்பினர் சக்திவேல், கோட்டச் செயலாளர் ஆறுமுகசாமி, கோட்ட தலைவர் தங்கமனோகர் ஆகியோர் உட்பட இந்து முன்னணியினர் இப்போராட்டத்தில் கலந்துகொண்டனர். அப்போது ரூபாய் ஆயிரம், இரண்டாயிரம், மூவாயிரம் என கட்டணம் வசூலிக்கப்படுவதை நிறுத்த கோரி கோஷம் எழுப்பினர்.

கூட்டத்தில் கலைக்க ஆத்தூர் காவல் ஆய்வாளர் பாலமுருகன் முயன்றார். இதனால் போலீசாருக்கும் பக்தர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது இதனால் திருச்செந்தூர் கிழக்கு பிரகாரம் போர்க்களம் போல் காட்சி ஆனது. அநியாயமாக கட்டணம் வசூலிப்பதை கண்டித்து அறநிலையத்துறை மற்றும் திமுக அரசுக்கு எதிராக பக்தர்கள் மண்ணை தூவி சாபம் விட்டு சென்றனர். இந்து முன்னணி நிர்வாகிகள் உட்பட 200க்கும் மேற்பட்ட பக்தர்கள் கைது செய்யப்பட்டு திருச்செந்தூர் மண்டபத்தில் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர்.

திருச்செந்தூரில் தரிசன கட்டணக்கொள்ளை – போராடிய பக்தர்கள் மீது காவல்துறை தடியடி – பதற்றம் – வீடியோ