தூத்துக்குடி: கந்த சஷ்டி விழா நடைபெற்று வரும் திருச்செந்தூரில் தரிசன கட்டணத்தை பலமடங்கு உயர்த்திய அறநிலையத்துறைக்கு எதிராக பக்தர்கள் இன்று போராடிய நிலையில், அவர்கள்மீது காவல்துறை தடியடி நடத்தியது. இது பெரும் பரபரப்பையும், பதற்றத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

திமுக அரசின் அழிவு காலம் தொடங்கி விட்டதாக பக்தர்கள் ஆவேசமாக தெரிவித்துள்ளனர். திமுக அரசு விரைவில் சம்ஹாரம் செய்யப்படும் என பக்தர்கள் சாபமிட்டனர்.

திருச்செந்தூர் கோவிலில் தற்போது கந்த சஷ்டி விழா நடைபெற்று வருகிறது. இதையொட்டி தினசரி பல ஆயிரம் பக்தர்கள் விரதம் இருந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர். இந்த நிலையில், சஷ்டியை முன்னிட்டு அனைத்து கட்டணங்களையும் அறநிலையத்துறை திடீரென உயர்த்தி உள்ளது. இது பக்தர்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதுவரை அபிஷேக கட்டணம்  ரூ.500ஆக இருந்து வந்த நிலையில், தற்போது திடீரென ரூ.3,000 ஆக உயர்த்தியும், விஸ்வரூப தரிசன கட்டணத்தை ரூ.100 லிருந்து ரூ.2,000 ஆக உயர்த்தியும் செய்தி வெளியிட்டிருப்பது மிகவும் வேதனையான விஷயமாக உள்ளது.

இந்து அறநிலையத்துறையினரின் செயலானது கடவுளை காட்சிப்பொருளாக்கி பணம் சம்பாதிக்கும் நோக்கத்தில் இருப்பதாக உள்ளது பக்தர்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். மேலும்,   விழாக்காலங்களில் கோவிலுக்கு வரும் பக்தர்கள் கூட்டத்தை கட்டுப்படுத் தவோ, அல்லது பக்தர்களின் வாகனங்களை நிறுத்தும் இடங்களில் ஏற்படும் போக்குவரத்து இடையூறுகளை கட்டுப்படுத்தவோ எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்காத தமிழக அரசு கட்டணத்தை அதிகப்படுத்தி பணம் சம்பாதிப்பதில் மட்டும் ஆர்வம் காட்டுவது ஏன்? என கேள்வி எழுப்பப்பட்டு வருகிறது.

மேலும், திருச்செந்தூர் கந்தசஷ்டி சிறப்பு வழி கோவில் நுழைவிற்கு தலைக்கு ₹ 1000 வசூலிக்கப்பட்டு வருகிறது. இதற்கு ரசீது கிடையாது, டோக்கனும் கிடையாது, எந்த கணக்கும் கேட்க இயலாது. இதை வசூலிப்பது யார்.? அறநிலைத்துறையினரா…? கட்சியினரா..? என கேள்வி எழுப்ப்பட்டு வருகிறது.

இதையடுத்து,  தரிசன கட்டணத்தை ரத்து செய்யக்கோரி பக்தர்கள் போராட்டம் இன்று காலை நடைபெற்றது. இதற்கு காவல்துறை அனுமதி மறுத்த நிலையில், அதை மீறி போராட்டம் நடைபெற்றது.  தரிசன கட்டணத்தை ரத்து செய்யக்கோரி திருச்செந்தூர் கோவில் அலுவலகம் முன்பு பக்தர்கள் போராட்டம் இந்து முன்னணி மாநில துணைத்தலைவர் வி பி ஜெயக்குமார் மாநில பொதுச் செயலாளர் டாக்டர் அரசு ராஜா மாநில செயலாளர் வழக்கறிஞர் குற்றாலநாதன் மாநில நிர்வாக குழு உறுப்பினர் சக்திவேல் கோட்டச் செயலாளர் ஆறுமுகசாமி கோட்ட தலைவர் தங்கமனோகர் ஆகியோர் உட்பட இந்து முன்னணி தொண்டர்கள் முருக பக்தர்கள் பெருந்திரளாக கலந்து கொண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும்,  ஆயிரம் இரண்டாயிரம் மூவாயிரம் என கட்டணம் வசூலிக்கப்படுவதை நிறுத்த கோரி கோஷம் எழுப்பினர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

இந்த நிலையில், பக்தர்களை கூட்டத்தை கட்டுப்படுத்திய காவல்துறையினருக்கும் பக்தர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதையடுத்து, கூட்டத்தில் உள்ளே புகுந்த ஆத்தூர் காவல் ஆய்வாளர் பாலமுருகன் பக்தர்கள் மீது தாக்குதல் நடத்த துவங்கினார். தொடர்ந்த, காவல்துறையினர் தடியடி நடத்தி பக்தர்களை கலைத்தனர்.   இதனால் திருச்செந்தூர் கிழக்கு பிரகாரம் போர்க்களம் போல் காட்சி ஆனது

அநியாயமாக கட்டணம் வசூலிப்பதை கண்டித்து அறநிலையத்துறை மற்றும் திமுக அரசுக்கு எதிராக பக்தர்கள் மண்ணை தூவி சாபம் விட்டு சென்றனர். திமுக அரசு விரைவில் சம்ஹாரம் செய்யப்படும் என்றும், திமுக அரசின் அழிவு காலம் தொடங்கி விட்டதாக பக்தர்கள் ஆவேசமாக தெரிவித்துள்ளனர்.

இந்து முன்னணி நிர்வாகிகள் உட்பட 200க்கும் மேற்பட்ட பக்தர்கள் கைது செய்யப்பட்டு திருச்செந்தூர் மண்டபத்தில் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர் இதனால் அங்கு பதற்றம் நிலவி வருகிறது.