சென்னை

மிழக சட்டப்பேரவையில் ஆபாசமாக செயல்படும் டிக்டாக் செயலியை தடை செய்ய மத்திய அரசிடம் பேசப்போவதாக கூறப்பட்டதற்கு டிக்டாக் நிறுவனம் பதில் அளித்துள்ளது.

மக்களின், ஆடல், பாடல் மற்றும் நடிப்புத் திறனை வெளிப்படுத்த டிக்டாக் என்னும் செயலி அறிமுகப்படுத்தப்பட்டது. ஆனால் தற்போது இந்த செயலியில் ஏற்றப்படும் வீடியோக்கள் ஆபாசத்தின் எல்லையில் உள்ளதாக குற்றசாட்டுக்கள் எழுந்தன. திரைப்பாடல்களில் உள்ள வரிகளுக்கு அருவெறுப்பான முறையில் அங்க அசைவு அளிக்கும் வீடியோக்கள் ஏராளமாக தரவேற்றம் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

தற்போது நடந்து வரும் தமிழக நிதிநிலை அறிக்கை கூட்டத்தொடரில் சட்டப்பேரவை உறுப்பினர் தமிமூன் அன்சாரி. “மிகவும் ஆபாசமாகவும் சட்டம் ஒழுங்கை சீர்குலைக்கும் வகையிலும் உள்ள டிக்டாக் செயலியை தடை செய்ய மத்திய அரசிடம் பேசி உடனடியாக தடை செய்ய வேண்டும்” என வலியுறுத்தினார்.

இதற்கு தமிழக தொழில்நுட்பத் துறை அமைச்சர் மணி கண்டன். “மக்களுக்கு தீங்கு விளைவிக்கும் புளூவேவ் விளையாட்டை மத்திய அரசு மூலம் ஏற்கனவே தடை செய்துள்ளோம். தற்போது பிரச்னை ஆகிவரும் டிக்டாக் செயலியும் இதைப்போலவே தடை செய்ய மத்திய அரசிடம் பேசி நடவடிக்கை எடுக்கப்படும்” என பதில் அளித்தார்.

இந்த தகவல்கள் வெளியானதை ஒட்டி டிக்டாக் செயலி நிறுவனம், “பாதுகாப்பான பொழுதுபோக்கு சேவையை மட்டுமே அளிக்க டிக்டாக் நிறுவனம் உறுதி கொண்டுள்ளது. அவைகளுக்கு மட்டுமே முன்னுரிமை அளிக்கிறது. ஆனா ஒரு சில பயனர்கள் இந்த செயலியை தவறாக பயன்படுத்துவதாக புகார்கள் வந்துள்ளன.

இதை தவிர்க்க தேவையான நடவடிக்கை எடுக்கப்படும்.  இதை ஒட்டி எங்களின் விதிமுறகளையும் சமூக வழிக்காட்டுதகளையும் மீறி பதியப்படும் பதிவுகள் குறித்து புகார் அளிக்கும்படி செயலி மாற்றி அமைக்கப்பட உள்ளது.  விரைவில் அதன் மூலம் தவ்றுதலான பதிவைக் கண்டால் உடனடியாக புகார் அளிக்கலாம்” என தெரிவித்துள்ளது.