சென்னை உயர்நீதி மன்றம் அனுமதி: சிக்குமா சின்னத்தம்பி…..

திருப்பூர்:

திருப்பூர் அருகே முகாமிட்டுள்ள சின்னத்தம்பி யானைக்கு காயம் ஏதும் ஏற்படாமல் பிடித்து வனத்துறை பாதுகாப்பில் பராமரிக்க சென்னை உயர்நீதி மன்றம் அனுமதி வழங்கி உள்ளது. இதையடுத்து இன்று சின்னதம்பியை பிடிக்க வனத்துறையினர் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகின்றனர்.

ஆனால், வனத்துறையினரின் கைக்குள் சின்னத்தம்பி சிக்குமா என்பதும் கேள்விக்குறியாகி உள்ளது.

காட்டுயானையான சின்னத்தம்பி, உடுமலைபேட்டை அருகே கரும்புத் தோட்டத்தில் பதுங்கி யுள்ளது. அதை பிடிக்க கும்கி யானை மூலம் முயற்சிகள் மேற்கொண்டும், நிறைவேறாத நிலையில், அதை பிடித்து கும்கியாக மாற்ற முயற்சிக்கப்படும் என அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கூறினார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த வன ஆர்வலர்கள், சின்னத்தம்பியை கும்கியாக மாற்றக்கூடாது என கொதித்தெழுந்தனர். அதைத்தொடர்ந்து முரளிதரன், அருண் பிரசன்னா என வன ஆர்வலர்கள், சென்னை உயர்நீதி மன்றத்தில், காட்டு யானை சின்னத்தம்பியை கும்கி யானையாக மாற்றாமல், மீண்டும் வனத்துறைக்கு அனுப்ப வேண்டும் கோரியிருந்தனர்.

இந்த வழக்கை விசாரித்து வரும் சென்னை உயர்நீதி மன்றம், பல்வேறு நிபந்தனைகளுடன் சின்னத்தம்பியை பிடிக்க வனத்துறைக்கு அனுமதி வழங்கி இடைக்கால உத்தரவு பிறப்பித்தது

சின்னத்தம்பியை பிடிக்கும்போது காயப்படுத்தவோ அல்லது துன்புறுத்தவோ கூடாது என்றும், அதனை பிடித்து முகாமிற்கு கொண்டு செல்லலாம் எனக் கூறியது. அத்துடன் சின்னத்தம்பியை முகாமில் வைப்பதா அல்லது நிரந்தரமாக காட்டுக்குள் கொண்டு சென்றுவிடலாமா? என்பதை வனத்துறை தலைமை பாதுகாவலர் முடிவுசெய்யலாம் எனவும் நீதிமன்றம் தெரிவித்தது.

இதைத்தொடர்ந்து சின்னத்தம்பியை பிடிக்க வனத்துறையினர் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகின்றன்ர். சின்னத்தம்பிக்கு மயக்க ஊசி செலுத்தி பிடிக்க முடிவு செய்துள்ள வனத்துறை யினர், அதற்காக கால்நடை மருத்துவர் அசோகன் தலைமையிலான குழுவினரை வரவழைத்துள்ளனர்.

யானையை லாரியில் ஏற்றி கொண்டு செல்ல  சாய்வுதளம் ஏற்படுத்திய பின்பே மயக்க மருந்து செலுத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக ஜேசிபி பயன்படுத்தாமல் கும்கிகளை கொண்டே லாரியில் ஏற்ற முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

வனத்துறையினரின் கையில் சின்னத்தம்பி சிக்குமா? அல்லது மீண்டும் போக்கு காட்டுமா என்பது இன்று மாலை தெரிய வரும்.

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


Tags: chinnathambi, Madras High Court's, Madras High Court's green signal., will be captured, கும்கி யானை, சின்னத்தம்பி, சின்னத்தம்பி சிக்குமா?, சென்னை உயர்நீதி மன்றம், தமிழக வனத்துறை
-=-