சென்னை: ரயில்களில் பயணச்சீட்டு எடுக்காமல் ‘வித்தவுட்’ பயணம் செய்தவர்களிடம் கடந்த  6 மாதங்களில்  அபராத தொகை மட்டும்  பல கோடி ரூபாய் வசூலாகி உள்ளது.

நடப்பு நிதியாண்டில், ஏப்ரல் 15ந்தி முதல் அக்டோபர்  15ந்தேதி வரையிலான 6 மாத காலக்கட்டத்தில் தெற்கு ரயில்வேயில் மட்டும், பயணச்சீட்டு இல்லாமல் பயணம் செய்தது தொடர்பாக சுமார்  10.39லட்சம்  வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளதாகவும்,  டிக்கெட் பரிசோதனைகள் மூலம் அபராதமாக  ரூ.57.48 கோடி  வசூலிக்கப்பட்டு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இதுதொடர்பாக தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,  நடப்பு நிதியாண்டில், கடந்த 6 மாதங்களில்  பயணச்சீட்டுசோதனை வருவாயாக ரூ.57.48 கோடி கிடைத்துள்ளது. அதிகபட்சமாக, சென்னை ரயில்வே கோட்டத்துக்கு ரூ.21.92 கோடி வருவாய் கிடைத்துள்ளது என தெரிவிக்கப்பட்டு உள்ளது.  மேலும்,  திருவனந்தபுரம் கோட்டத்துக்கு ரூ.8.72 கோடியும், பாலக்காடு கோட்டத்துக்கு ரூ.8.32 கோடியும், சேலம் கோட்டத்துக்கு ரூ.8.15கோடியும், மதுரை கோட்டத்துக்கு ரூ.5.41 கோடியும், திருச்சிராப்பள்ளி கோட்டத் துக்கு ரூ.4.90 கோடியும் வருவாய் கிடைத்துள்ளது.

இதுகுறித்து கூறிய தெற்கு ரயில்வே அதிகாரிகள், ‘‘ரயில்களில் டிக்கெட்இன்றி பயணிப்பவர்கள், முன்பதிவில்லாத டிக்கெட் எடுத்து முன்பதிவு பெட்டிகளில் பயணிப்பவர்களைக் கட்டுப்படுத்தும் விதமாக, பரிசோதனை நடத்தப்படுகிறது. இதன்மூலமாக, உண்மையான பயணிகளின் பயண அனுபவம் மேம்படுத்தப்படுகிறது’’ என்று கூறினர்.