சென்னை:

சென்னையில் தினசரி பொதுமக்களிடம் இருந்த சேகரிக்கப்படும் உணவு கழிவு களில் இருந்து இயற்கை எரிவாயு தயாரிக்கும் வகையில் 3 ஆலைகள் அமைக்கப் பட உள்ளதாக  சென்னை மாநகராட்சி கமிஷனர் பிரகாஷ் தெரிவித்து உள்ளார்.

மாதம் ஒன்றுக்கு 300 டன் அளவிலான  உணவுக்கழிவுகளில் இருந்து எரிவாயு தயாரிக்கும் வகையில் 3 ஆலைகள் அமைக்கப்பட உள்ளதாகவும், இதற்கான பணிகள் அடுத்த மாதம் தொடங்கும் என்றும் கூறி  உள்ளார்.

சென்னை மாநகரில் உள்ள 200 வார்டுகளில் தினமும் 5 ஆயிரத்து 400 டன் குப்பை கள் சேகரிக்கபடுகின்றன.   அவை கொடுங்கையூர் மற்றும் பெருங்குடியில் உள்ள குப்பை கொட்டும் வளாகங்களில் கொட்டப்பட்டு வருகின்றன.  அந்தப் பகுதிகளில் இந்த குப்பைகளால் பல்வேறு சுகாதாரக் கேடுகள் மற்றும் சுற்றுச்சூழல் பாதிப்புகள் ஏற்படுவதாக புகார்கள் எழுகின்றன  .

அதனால் அவற்றை தடுக்கும் விதமாக குப்பை கொட்டும் வளாகங்களுக்கு கொண்டு செல்லப்படும் குப்பைகளின் அளவை குறைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாநக ராட்சி ஆணையர் கோ.பிரகாஷ் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்.

தற்போது வீடுகளில் இருந்து வெளியேறும் உணவுக் கழிவுகள், காய்கறி மற்றும் சமையலறை கழிவுகளில் இருந்து உயிரி எரிவாயு (பயோமாஸ் காஸ்) எடுக்க சென்னை மாநகராட்சி நடவடிக்கை எடுத்து வருகிறது.

இது குறித்து செய்தியாளர்களிடம் பேசியவர், “சென்னை மாநகராட்சியில் சேகரிக்கப்படும் குப்பை களை கிடங்குகளுக்கு கொண்டு செல்வதை குறைக்கும் விதமாக ஏற்கெனவே 73 இடங்களில், மக்கும் குப்பைகளைக் கொண்டு இயற்கை உரம் தயாரிக்கப்பட்டு வருகிறது. அத்துடன் ஏற்கனவே  2 இடங்களில் தலா 5 டன் எடை கொண்ட, குப்பைகளில் இருந்து எரிவாயு உற்பத்தி செய்து, அதன் மூலமாக மின்சாரம் தயாரிக்கும் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

தற்போது அதன் தொடர்ச்சியாக மணலி மண்டலம், 18-வது வார்டு பகுதியில் ஒர் உயிரி எரிவாயு உற்பத்தி மையம் அமைக்கப்பட்டு வருகிறது. அந்த திட்டத்துக்கு ரூ.2 கோடியே48 லட்சம் செலவாக உள்ளது.   இங்கு உருவாகும் உயிரி எரிவாயுவில் இருந்து மின்சாரம் தயாரித்து, தெருவிளக்குகள் எரிக்க பயன்படுத்தப்பட உள்ளது” என தெரிவித்துள்ளார்.

இதற்கான டெண்டர் அடுத்த வாரம் அறிவிக்கப்படும் என்றவர், இந் எரிவாயு ஆலைகள்  தனியார்-பொது கூட்டுறவில் அமைக்கப்படும், அங்கு தனியார் நிறுவனம் உற்பத்தி மற்றும் வசதியை பராமரிக்கும் பொறுப்பில் இருக்கும் என்றும் தெரிவித்தார்.

இந்த பயோ கேஸ் ஆலைகள் சென்னையில், பள்ளிக்கரனை, சோழிங்கநல்லூர், அண்ணாநகரில் அமைக்கப்பட இருப்பதாகவும், இதற்காக ரூ.9.3 கோடி செலவாகும் என்று கணிக்கப்பட்டு இருப்பதாகவும் தெரிவித்து உள்ளார்.