உயிருக்கு ஆபத்து!: சென்னை ஆணையர் அலுவலகத்தில் நடிகை புகார்

Must read

சென்னை: புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள பிரபல ரவுடி வைரம்  என்பவர் தனக்கு செல்போன் மூலம் கொலை மிரட்டல் விடுத்ததாக சென்னை காவல்துறை ஆணையரிடம் நடிகை ராதா புகார் அளித்தார்.
சுந்தரா டிராவல்ஸ் உள்ளிட்ட சில தமிழ் படங்களில் நடித்தவர் ராதா. தொடர்ந்து பட வாய்ப்புகள்  இல்லாவிட்டாலும், வேறு விவகாரங்களினால் அடிக்கடி மீடியாவில் அவரது பெயர் அடிபட்டது.
பைசூல் என்ற தொழில்அதிபர் மீது கடந்த 2013ம் ஆண்டு ராதா போலீசில் புகார் அளித்தார் ராதா. “பைசூல் எனக்கு படத்தில் நடிக்க வாய்ப்பு தருவதாகக் கூறி, ரூ.20 லட்சம் மோசடி செய்துவிட்டார்.  என்னை திருமணம் செய்து கொள்வதாகக் கூறி ஏமாற்றி பலமுறை உடல்ரீதியான தொடர்பு வைத்துக்கொண்டார்.  இருவரும் கணவன், மனைவி போல ஒரே வீட்டில் கடந்த 6 ஆண்டுகள் வாழ்ந்தோம்” என்று ராதா கூறியிருந்தார்.
மேலும், பைசூல் தன்னை ஆபாசமாக அவர் படம் எடுத்து வைத்துள்ளதாகவும்’ ராதா குற்றம் சாட்டியிருந்தார்.
0
இதற்கிடையே சில வாரங்களுக்கு முன்னர் சென்னையைச் சேர்ந்த அதிமுக பிரமுகரான முனிவேல் என்பவரின் மனைவியான உமாதேவி, நடிகை ராதா மீது காவல்துறையில் புகார் அளித்தார். அதில் அவர், ‘ராதா என் கணவர் முனிவேலை என்னிடமிருந்து பிரிக்க முயல்கிறார். எனக்கு கொலை மிரட்டல் விடுக்கிறார்.  மேலும், கடந்த சில நாட்களாக தன் கணவரைக் காணவில்லை” என்று அவர் கூறியிருந்தார்.   இந்தப் புகாரை நடிகை ராதா மறுத்தார்.
இந்த நிலையில்,  இன்று சென்னை காவல்துறை ஆணையரிடம் புகார் ஒன்றை அளித்தார் ராதா. அதில், “புழல் சிறையில் உள்ள பிரபல ரவுடி வைரம் எனக்கு போன் மூலம் கொலை மிரட்டல் விடுகிறார். இதற்கான ஆடியோ ஆதாரமும் உள்ளது” என்றார்.
இந்த ஆடியோ வாட்ஸ்அப்பில் வைரலாகி வருகிறது. அதில்,  ‘என் பெயர் வைரம். நான் கந்துவட்டி தொழில் செய்கிறேன். தற்போது புழல் சிறையில் இருக்கிறேன். முனிவேலுடன் உனக்கு இருக்கும் தொடர்பை விட்டுவிட வேண்டும். என் பெயரை முனிவேலிடம் சொன்னாலே, உன் பின்னால் வரமாட்டார். ஓடி போய்விடுவார். நான் ரவுடியாக இருந்தாலும், நேர்மையாக நடப்பவன். பிரச்சினையை தீர்க்கவேண்டும் என்று நினைக்கிறேன். பிரச்சினையை பெரிதாக்க நினைத்தால் நீ இருக்க மாட்டாய். இப்படி நான் மிரட்டுவதை போலீசில் சொன்னாலும், கவலை இல்லை. உன்னை கொலை செய்கிற அளவுக்கு, நீ பெரிய ஆள் இல்லை. ஒரு சாதாரண நடிகை. என் மீது 16 வழக்குகள் உள்ளன. முனிவேலை நீ கல்யாணம் பண்ணிப்பார். நீ இருக்க மாட்டாய். முனிவேலும் இருக்க மாட்டார்’ என்று  ஆண்குரல் மிரட்டல் தொணியில் ஒலிக்கிறது.
இது குறித்து பத்திரிகையாளர்களிடம்  பேசிய ராதா, தனது காதல் விவகாரத்தில் ரவுடி வைரம் தலையிட்டு கொலை மிரட்டல் விடுவதாக குற்றம் சாட்டினார்.
.

More articles

Latest article