சென்னை:
மிழ்நாட்டில் தடுப்பூசி இன்று போட்டவர்களின் எண்ணிக்கை புதிய உச்சத்தை தொட்டுள்ளது.

இந்தியாவில் கொரோனா பரவல் அதிகமாக இருக்கிறது. கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ள மாநிலங்களில் தமிழகம் 4-வது இடத்தில் இருக்கிறது. தமிழகத்தில் நேற்று 33 ஆயிரத்து 764 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. அந்தவகையில் இதுவரை தமிழகத்தில் 19 லட்சத்து 45 ஆயிரத்து 260 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

கொரோனாவுக்கு தடுப்பூசி தான் தீர்வு என்ற வகையில் எல்லா மாநிலங்களிலும் முனைப்புடன் தடுப்பூசி போடும் பணிகள் நடந்து வருகின்றன. ஆனால் தடுப்பூசி போட்ட மாநிலங்களில் தமிழ்நாடு 11-வது இடத்தில்தான் இருக்கிறது. கடந்த சில நாட்களாக மிக குறைவான அளவிலேயே தடுப்பூசி போடப்பட்டு வந்த நிலையில், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நிறைய பேருக்கு தடுப்பூசி போடவேண்டும் என்று பிறப்பித்த உத்தரவை தொடர்ந்து, தடுப்பூசி போடும் வேகம் தற்போது அதிகரித்து வருகிறது.

இந்நிலையில், தமிழ்நாட்டில் தடுப்பூசி இன்று போட்டவர்களின் எண்ணிக்கை புதிய உச்சத்தை தொட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதுகுறித்து வெளியான தகவலில் தமிழ்நாட்டில் 3.23 லட்சம் பேர் இன்று தங்கள் கோவிட் தடுப்பூசி செலுத்தி கொண்டார்கள். இதில், 2.58 லட்சம் பேர் 18-44 வயதுக்கு உட்பட்டவர்கள் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.