சென்னை:

சியர் தகுதித்தேர்வு எழுதாதவர்கள். தேர்ச்சி பெறாதவர்கள்  பணியில் நீடிக்க அனுமதிக்க முடியாது என்று சென்னை  உயர்நீதி மன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்து உள்ளது.

தமிழகத்தில் அரசு பள்ளி ஆசிரியர்கள், அரசு உதவி  பெறும் பள்ளிகள்,   தனியார் பள்ளிகளில் தரமற்ற ஆசிரியர்களை பணிக்கு அமர்த்தி  இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில் ஆசிரியர்கள், அரசு நடத்தும் ஆசிரியர் தகுதி தேர்வான டெட் தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என்று மத்திய அரசு உத்தரவிட்டது.  இதை நீதிமன்றங்களும் உறுதி செய்துள்ளன.

அதையடுத்து, கடந்த  2012-ம் ஆண்டு  அரசு உதவி பெறும் சிறுபான்மை பள்ளிகளில் பணியில் பணியாற்றி வரும் ஆசிரியர்களும் தகுதி தேர்வு எழுதி பாசாக வேண்டும் என்று அறிவிக்கப்பட்டு தேர்வு நடத்தப்பட்டது. தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறவிட்டால் பணியில் இருந்து நீக்கப்படுவர் என்றும் அறிவிக்கப்பட்டது.  அவர்கள் தேர்ச்சி பெற 5 ஆண்டு காலம் அவகாசம் வழங்கப்பட்டது.

அனால், இதுவரை தேர்ச்சி எழுதியும், தேர்ச்சி பெறாமல் சுமார் 1500 ஆசிரியர்கள் பணியாற்றி வருவதாக கூறப்படுகிறது. அவர்களின் 5 ஆண்டுகால அவகாசம் ஏப்ரலுடன் நிறைவடைய உள்ளது. இதையொட்டி, தேர்ச்சி பெறாத ஆசிரியர்களின் ஏப்ரல் மாதத்திற்கான ஊதியம் வழங்கப்படவில்லை.

இதையடுத்து சம்பளம் நிறுத்தப்பட்ட ஆசிரியர்கள் தரப்பில் சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.  இந்த வழக்கை திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள கஸ்தூரிபாய் காந்தி பாலிகா வித்யாலயா என்ற அரசு உதவி பெறும் பள்ளியில் பணியாற்றும் இந்திரா காந்தி உள்ளிட்ட 4 ஆசிரியர்கள் 2019-ம் ஆண்டு ஆசிரியர் தகுதித் தேர்வு முடிவுகள் வெளியாகும் வரை தங்களை பணிநீக்கம் செய்ய தடை விதிக்க வேண்டும் என்றும்,   ஆசிரியர் தகுதித் தேர்வு எழுதாத காரணத்தைக் கூறி, தங்களை பணி நீக்கம் செய்ய தடை விதிக்க கோரியும் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

இந்த வழக்குகள் அனைத்தும்,  நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் விசாரித்தார். அப்போது, தமிழக அரசுத்தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் மத்திய அரசின் சர்வ சிக்ஷா அபியான் திட்டத்தின்படியும், கல்வி உரிமைச் சட்டத்தின்படியும், 2011-ம் ஆண்டு முதல் ஆசிரியர் தகுதித் தேர்வு கட்டாயமாக்கப் பட்டுள்ளது எனவும் அதன்படி, 2012, 2013, 2014, 2017-ம் ஆண்டுகளில் ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்தப்பட்டதாகவும், நடப்பாண்டு இந்த தேர்வு நடத்த இருப்பதாகவும் தெரிவித்தார்.

மேலும், ஆசிரியர் தகுதித் தேர்வு முடிக்க மார்ச் 31-ம் தேதி வரை அவகாசம் வழங்கிய மத்திய அரசு அதன்பின் காலக்கெடுவை நீட்டிக்க மறுத்து விட்டதாகவும் அரசுத்தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதை ஏற்றுக் கொண்ட நீதிபதி, ஆசிரியர் தகுதித் தேர்வு எழுதாதவர்களை பணியில் நீடிக்க அனுமதிக்க முடியாது எனக் கூறி, மனுக்களை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

விசாணையின்போது, ஏற்கனவே 8 ஆண்டுகள் அவகாசம் வழங்கியும், தகுதித் தேர்வு முடிக்காத வர்களுக்கு எந்த கருணையும் காட்ட முடியாது எனத் தெளிவுபடுத்திய நீதிபதி, பத்தாம் வகுப்பு தேர்ச்சியடையாத மாணவரை 11-ம் வகுப்பில் சேர்க்க முடியுமா எனவும் கேள்வி எழுப்பினார்.

மேலும் ஆசிரியர் தகுதத் தேர்வு முடிக்காத ஆசிரியர்களிடம் விளக்கம் கேட்டு 2 வாரங்களில் நோட்டீஸ் அனுப்ப வேண்டும். நோட்டீசுக்கு பதிலளிக்க 10 நாட்கள் அவகாசம் வழங்கி அவர்களின் பதிலைப் பெற்று சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தமிழக அரசுக்கு உத்தரவிட்டார்.