சென்னை:

சென்னை மெட்ரோ ரயில் ஊழியர்கள் போராட்டம் அரசியல் கட்சிகளின் தலையீட்டால் பெரிது படுத்தப்பட்டு வரும்  நிலையில், பல மெட்ரோ  ரயில்கள் சரிவர இயக்கப்படாத காரணத்தால் பயணிகள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். இதன் காரணமாக, பலர் மெட்ரோ ஊழியர்களுக்கு எதிராக குரல்கொடுக்க தொடங்கி உள்ளனர்.

தொழிலாளர் சங்கம் உருவாக்க முயன்றதாக மெட்ரோ ரயில் ஊழியர்களை சிலரை நிர்வாகம் பணி நீக்கம் செய்த நிலையில், அவர்களுக்கு ஆதரவாக ஒரு தரப்பினர் கடந்த 3 நாட்களாக தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனால்  3-வது நாளாக பயணிகள் அவதியடைந்து வருகின்றனர்.

தற்போதுதான் மெட்ரோ ரயிலுக்கு பயணிகள் கூட்டம் சற்று அதிகரித்து வந்த நிலையில், ரயில் ஊழியர்களின் போராட்டம் காரணமாக பயணிகள் வரத்து குறையத்தொடங்கி உள்ளது. மெட்ரோ ரயில் ஊழியர்களின் கோரிக்கை  ஏற்க மறுத்து மெட்ரோ ரயில் நிர்வாகம் முரண்டு பிடித்து வரும் நிலையில், இன்று மீண்டும் தமிழக தொழிலாளர் துறை அலுவலகத்தில் முத்தரப்பு பேச்சு வார்த்தை நடைபெற்று வருகிறது.

நேற்று  சென்னை குறளகத்தில் உள்ள  தொழிலாளர் நலத்துறை உதவி ஆணையர் ஜானகிராமன் தலைமையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில், மெட்ரோ ரயில் நிர்வாக அதிகாரிகள், சிஐடியு மாநில தலைவர் சவுந்திரராஜன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். சுமார் 6 மணி நேரம் நீடித்த பேச்சுவார்த்தையில், 8 பேர் பணிநீக்கத்தை ரத்து செய்ய மெட்ரோ ரயில் நிர்வாகம் மறுத்தது. இதனால் முத்தரப்பு பேச்சுவார்த்தை எந்தவித உடன்பாடும் ஏற்படாமல் முடிவடைந்தது.

இதைத் தொடர்ந்து இன்று மீண்டும் முத்தரப்பு பேச்சுவார்த்தை நடைபெறுகிறது. இந்த பேச்சுவார்த்தையிலும் உடன்பாடு ஏற்படாவிட்டால், தங்களது போராட்டம் தொடரும் என மெட்ரோ ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.

ஊழியர்களின் போராட்டம் காரணமாக 85 சதவீதம் மெட்ரோ ரயில் சேவை நேற்று இயக்கப்பட வில்லை. இதனிடையே, மெட்ரோ ரயில் நிறுவன கட்டுப்பாட்டு அறையில் நுழைந்து பாதுகாப்பு அச்சுறுத்தல் ஏற்படுத்தியதாக மெட்ரோ ஊழியர்கள் 18 பேர் மீது போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

மெட்ரோ ரயில் ஊழியர்கள் மத்தியில் அரசியல் கட்சியினர் ஊடுருவி, நிர்வாகத்துக்கு எதிராக தொழிலாளர் சங்கத்தை நிறுவ முயற்சி செய்ததால் தற்போது பிரச்சினை விசுவரூபம் எடுத்து வருகிறது. அரசியல் கட்சியினரின் வாக்குறுதியை நம்பி ஊழியர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு வருவது மெட்ரோ ரயில் பயணிகளிடையே கடுமையான அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

ஏற்கனவே தென்னக ரயில்வே உள்பட பல மத்திய அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் வட மாநில தொழிலாளர்கள் பணியமர்த்தப்பட்டு வரும் நிலையில், தற்போது நடைபெற்று வரும் மெட்ரோ ஊழியர்கள் போராட்டமும் பொதுமக்கள் மட்டுமின்றி இளைஞர்கள் மத்தியிலும் அதிருப்தியை ஏற்படுத்தி வருகிறது..

தமிழகத்தை சேர்ந்த ஊழியர்கள் அரசியல் கட்சியின் பின்புலத்தில் போராட்டம் நடத்தி வருவதால், வெளிமாநில தொழிலாளர்களை பணியமர்த்தும் பணியில் நிர்வாகம் ஈடுபடத்தொடங்கினால், தமிழகத்தை சேர்ந்தவர்களுக்கு கிடைக்கும் சொற்ப வேலைவாய்ப்பும் பறிபோய்விடும்…..

இந்த பிரச்சினைக்கு அரசு மற்றும் மெட்ரோ நிர்வாகம் விரைவில் தீர்வு காண வேண்டும் என்று மக்கள் எதிர்பார்க்கிறார்கள்.