கடந்த 2014ம் ஆண்டு தேர்தலில் வென்று மத்தியில் ஆட்சியைப் பிடித்தப் பிறகு, ஒரு ஜாதிக்கு எதிராக பிற ஜாதிகளை அணிதிரட்டுவது, மதக் கலவரங்களை ஏற்படுத்துவது, பிரிவினைவாதிகள் என்றும் தீய சக்திகள் என்றும் இவர்களால் முத்திரைக் குத்தப்பட்டவர்களுடனேயே கூட்டணி சேர்வது, தேர்தல் கமிஷனை தமது வசதிக்குப் பயன்படுத்திக் கொள்வது, மாநில கவர்னர்களை தமது முகவர்களாகப் பயன்படுத்திக் கொள்வது, எதிர்க்கட்சி உறுப்பினர்களை தேவையான அளவிற்கோ அல்லது மொத்தமாகவோ விலைக்கு வாங்குவது, பலரையும் மிரட்டி பணிய வைப்பது உள்ளிட்ட பல்வேறான சீரிய பணிகளை செய்த பாரதீய ஜனதா கட்சி, ‘இந்தியாவில் நாங்கள் இத்தனை மாநிலங்களைப் பிடித்துவிட்டோம்; அத்தனை மாநிலங்களில் கொடிநாட்டிவிட்டோம்’ என்று தம்பட்டம் அடித்து வந்தது.

ஆனால், சமீபத்தில் 3 வடமாநில தேர்தல்களில் சந்தித்த தோல்விகளை அடுத்து, அடக்கி வாசிக்கத் தொடங்கியது. தொடக்கத்தில் வடமாநிலக் கட்சியாக, குறிப்பாக, ‘ஹிந்தி பெல்ட்’ கட்சியாக அறியப்பட்ட பாரதீய ஜனதா, வேறுசில மாநிலங்களிலும் வளரத் தொடங்கியது.

இக்கட்டுரையைப் பொறுத்தமட்டில், தென்மாநிலங்களில் அக்கட்சியின் நிலை குறித்தும், அதன் ‘தொண்டையில் சிக்கியிருக்கும் முள்’ குறித்தும் ஒரு மேலோட்டமான அலசலை மேற்கொள்ளப் போகிறோம்.

கர்நாடக மாநிலத்தைப் பொறுத்தவரை, பாரதீய ஜனதாவின் செல்வாக்கு என்ன? என்பது குறித்து நாம் இங்கே எதையும் சொல்ல வேண்டிய தேவையிருக்காது என்றே நினைக்கிறேன்.

சரி, இப்போது தெலுங்கானாவுக்கு வருவோம். அது புதிய மாநிலம்தான் என்றாலும், பாரதீய ஜனதாவுக்கென்று ஒரு குறிப்பிட்ட செல்வாக்கு இருக்கவே செய்கிறது. கடந்தாண்டு (2018) நடைபெற்ற அம்மாநில சட்டசபை தேர்தலில், பெரிய கூட்டணி ஏதுமின்றியே 7% வாக்குகளைப் பெற்றது பாரதீய ஜனதா. அம்மாநிலத்தில் அக்கட்சியின் மீது பிரத்யேக வெறுப்பலை என்று எதுவும் கிடையாது.

இன்னொரு தெலுங்கு மாநிலமான ஆந்திராவை எடுத்துக்கொண்டால், தெலுங்கு தேசம் கட்சியுடன் கூட்டணி அமைத்து கடந்த தேர்தல்களில் போட்டியிட்டது அக்கட்சி. பாரதீய ஜனதாவுடன் கூட்டணி அமைத்துப் போட்டியிட்ட ஒரு கட்சி, மாநிலத்தில் ஆட்சியைப் பிடிக்க முடிகிறதென்றால், ஆந்திராவில், பாரதீய ஜனதா ஒரு பிரச்சினையில்லை (அக்கட்சிக்கான எதிர்ப்பு இல்லை) என்றே அர்த்தமாகிறது.

படித்தவர்கள் அதிகமிருக்கும் மாநிலம் என்றும், அறிவாளிகள் நிறைந்திருக்கும் மாநிலம் என்றும் அடையாளப்படுத்தப்படும் கேரளத்திற்கு வருவோம்.

பல ஆண்டுகளாவே, வடக்கு கேரள மாவட்டங்களில் இந்துத்துவ அமைப்புகளுக்கு இருக்கும் செல்வாக்கால், அப்பகுதிகளில் பாரதீய ஜனதாவுக்கு ஒரு தனிப்பட்ட செல்வாக்கு இருந்து வந்தது. பின்னர், நாளாக நாளாக, அக்கட்சி அம்மாநிலத்தில் குறிப்பிடத்தக்க அளவில் வளர்ந்து வந்தது.

கடந்த 2014ம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில், கேரளத்தில் பா.ஜ. பெற்ற வாக்குகள் 10.33%.

2016 சட்டமன்ற தேர்தலில், பா.ஜ. பெற்ற வாக்குகள் 10.6%.

* அம்மாநிலத்தில், அக்கட்சியால் பெரிய பேரணிகளை நடத்த முடிகிறது.

* சபரிமலை போன்ற விஷயங்களை ஒரு பெரிய சிக்கலாக மாற்றி, கவனத்தை ஈர்க்க முடிகிறது.

* தனது செயலுக்கு, அம்மாநிலத்தின் மிகப்பெரிய கட்சியான காங்கிரசையும்கூட கருத்தியல்ரீதியாக துணைக்கு அழைத்துக் கொள்ளும் அளவிற்கு அங்கே பாரதீய ஜனதாவால் பாதிப்பை உண்டாக்க முடிகிறது.

கேரளாவில் நிலவும் வெளிப்படையான ஜாதிய அரசியல், அம்மாநிலத்தில் கடந்த காலங்களில் நிலவிய கொடூரமான சனாதன நடைமுறைகளின் உட்பொதிந்த நீட்சி, அவர்களின் குறுகிய லாபியிஸ மனப்பான்மை உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள், பாரதீய ஜனதா அம்மாநிலத்தில் தொடர்ந்து வலிமைப்பெற்று வருவதற்கு காரணிகளாக இருக்கலாம்.

சரி, இப்போது கடைசியாக நம் ஊருக்கு வருவோம். இந்த மாநிலத்தில்தான் அவர்களுக்கு நிறைய விஷயங்கள் புரிபடவேயில்லை. காஷ்மீர் மற்றும் சில வடகிழக்கு மாநிலங்களில், பிரிவினைவாத கட்சிகள் மற்றும் இயக்கங்களுடனெல்லாம் தேர்தலுக்காக கூட்டணி வைத்து (அந்தக் கட்சிகள் மற்றும் இயக்கங்களின் கொள்கைகளோடு இவர்களுக்கு நேர்விரோதம் என்றாலும்கூட) ஆட்சியைப் பிடித்த அல்லது ஆட்சியில் பங்குபெற்ற நிகழ்வுகள் நடந்தபோது, தமிழகத்தில் மட்டும் அவர்களது கட்சியின் வளர்ச்சிப் பயணம் எதிர்மறையாகவே இருந்தது.

கடந்த நூற்றாண்டில் நடந்த பல வீரியமிக்க போராட்டங்களின் மூலம், தமிழகத்திற்கென்று கட்டமைத்து வைக்கப்பட்ட பல சமூக மனப்பாங்குகள் மற்றும் அடையாளங்களுக்கு எதிராகவே கருத்துச் சொல்வது மற்றும் அவற்றுக்கு எதிராக செயல்படுவது என்று நடந்து வருகின்றனர் அக்கட்சியினர்.

ஜெயலலிதாவின் மறைவிற்கு பின்னர், சசிகலாவை எதிர்ப்பதன் வாயிலாக, முக்குலத்தோர் சமூகத்திற்கெதிரான social engineering -ஐ தமிழகத்தில் வளர்த்து, அதன்மூலம் ஆதாயம் அடைய முயற்சித்ததாக சில அரசியல் விமர்சகர்கள் ஆராயாமல் பேசுகிறார்கள். ஆனால், அந்த நோக்கத்திற்காக பாரதீய ஜனதா, பன்னீர் செல்வம் என்ற இன்னொரு முக்குலத்தோரை ஏன் தேர்வுசெய்ய வேண்டுமென்ற ஒரு சாதாரண விஷயத்தை சிந்திக்கவில்லை அந்த ஆய்வாளர்கள்.

மேலும், தற்போது பாரதீய ஜனதாவால் ஆதரிக்கப்படும் எடப்பாடி பழனிச்சாமி, கொங்கு வேளாளர் சமூகத்தைச் சேர்ந்தவர். முக்குலத்தோரைப் போலவே, அதிமுகவில் நீண்டகாலமாக, கொங்கு வேளாளருக்கென்று ஒரு தனி செல்வாக்கும் லாபியும் உண்டு.

அப்படி இருக்கையில், கொங்கு வேளாள முதலமைச்சரை ஆதரித்தால், அதன்பொருட்டு, வேறுசில சமூகத்தினர் பாரதீய ஜனதாவை ஆதரிப்பர் என்கிறார்களா அந்த அரசியல் விமர்சகர்கள்?

ஜெயலலிதாவின் மரணத்தின் மூலம், மோடி & அமித்ஷா கூட்டணி கொஞ்சமும் எதிர்பார்க்காத ஒரு வாய்ப்பு தமிழகத்தில் வந்ததென்னவோ உண்மை. எப்படி அருணாச்சலப் பிரதேசத்தில் ஆண்ட காங்கிரஸ் கட்சியின் உறுப்பினர்களை ஏறக்குறைய மொத்தமாக விலைக்கு வாங்கி, அங்கே தங்களின் ஆட்சியை அமைத்தார்களோ, திரிபுராவில் பலமாக இருந்த காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர்களையெல்லாம் மொத்தமாக விலைக்கு வாங்கி, அங்கே யாரும் எதிர்பார்க்காத வகையில் மாணிக் சர்க்காரை எப்படி வீழ்த்தினார்களோ, அத்தகைய மாடலில் ஒரு திட்டத்தை அவர்கள் தமிழகத்திலும் அரங்கேற்ற முயன்றார்கள் அல்லது முயல்கிறார்கள் என்றே சொல்லலாம்.

Hard Hindutva கட்சியான பாரதீய ஜனதாவுக்கு, தமிழகத்திலிருந்து கிடைக்க வேண்டிய Soft Hindutva வாக்குகளை ஜெயலலிதா அபகரித்து விடுகிறார் என்ற ஒரு அரசியல் பார்வை நெடுநாட்களாகவே தமிழகத்தில் உண்டு.

அந்த ஜெயலலிதாவே இல்லாமல் போனபோது, பாரதீய ஜனதா, அன்றைய சூழலை முன்வைத்து, அதிமுகவை தங்களின் கட்டுப்பாட்டில் கொண்டு வந்தததென்னவோ உண்மைதான். தமிழகத்தில் அதுவரை ஏற்கப்படாத சில திட்டங்களை, அதன்பின்னர் உள்ளே நுழைத்தார்கள் என்பதும் உண்மைதான். தமிழகத்தை ஆள்வது அதிமுக அரசா? அல்லது பாரதீய ஜனதா அரசா? என்று புரியாத அளவிற்கு நிலைமைகள் உள்ளன என்பதும் உண்மைதான்.

ஆனால், ஜெயலலிதா பெற்றதாக சொல்லப்பட்ட soft Hindutva வாக்குகளை, அதே நிலையெடுத்தோ அல்லது சற்று சமரசமாக செயல்பட்டோ பெற முயலாமல், முற்றிலும் hard Hindutva நிலை எடுத்தது எந்த வகையான அரசியல் சாதுர்யம் என்று புரியவில்லை.

தமிழ்நாட்டு அரசில், அவர்களின் ஆதிக்கம் அதிகரிக்க அதிகரிக்க, இம்மாநிலத்தின் சமூகதளத்தில் அவர்களுக்கான எதிர்ப்பு, அதுவரை இல்லாத அளவில் அதிகரித்துக்கொண்டே சென்றது. அந்த எதிர்ப்பை எப்படி திசைமாற்றலாம் என்று ஆக்கப்பூர்வமாக யோசிப்பற்கு பதிலாக, எதிர்ப்பு அதிகரிக்கக்கூடிய பாதையிலேயே தொடர்ந்து பயணித்தனர் அக்கட்சியினர்.

இது, அருணாச்சலப் பிரதேசம் மற்றும் திரிபுரா மாதிரி இல்லாமல், பெரிய மாநிலம்தான். ஆனால், இந்த அரிதான வாய்ப்பைப் பயன்படுத்தி, அக்கட்சி, ஓரளவேனும் சமூகதளத்தில் ஊடுருவியிருக்க முயற்சித்திருக்க வேண்டும். ஆனால், இந்த மண்ணின் மனப்பாங்கிற்கு தோதான கட்சியாக, பாரதீய ஜனதாவால் போலியாக நடிக்கக்கூட முடியவில்லை அல்லது முயலவில்லை.

ஒரு தேசிய கட்சியின் முதலமைச்சராக இருந்தபோதும், திராவிட சித்தாந்தத்திற்கு எதிராகவோ அல்லது பெரிய முரணாகவோ காமராஜர் எப்போதும் சென்றதில்லை. முடிந்தளவிற்கு, அந்த சித்தாந்தம் சொன்ன பல விஷயங்களை நடைமுறைப்படுத்தவே செய்தார். பல அம்சங்களில், திராவிட சித்தாந்தத்தை உள்வாங்கியவராகவே விளங்கினார் காமராஜர். ஆனாலும், அவரால் திமுகவின் வளர்ச்சியை தடுக்க முடியவில்லை என்பதுவே உண்மை. காமராஜருக்குப் பின்னர் முதல்வர் பொறுப்பேற்ற பக்தவச்சலம், தமிழக மனப்போக்கிற்கு இணங்கி செல்லாததன் விளைவு, காங்கிரஸ் அரியாசனத்தை விரைவிலேயே பறிகொடுத்தது. இன்றுவரை, அதில் மீண்டும் ஏறி அமரவே முடியவில்லை.

ஆனாலும், அதற்குப் பிறகான காலங்கள் தொடங்கி இப்போதுவரை, தமிழக காங்கிரஸ் தலைவர்கள் யாரும், திராவிட சித்தாந்தத்தை வெளிப்படையாக எதிர்த்துப் பேசுவதோ, ஹிந்தி மொழிக்கு ஆதரவு தெரிவிப்பதோ கிடையாது என்பதையும் நாம் கவனிக்க வேண்டும். அவர்கள், காமராஜர் ஆட்சியைத்தான் கொண்டுவருவோம் என்கிறார்களே ஒழிய, பக்தவச்சலம் ஆட்சியை அல்ல!

காங்கிரசின் இளம் தலைவரான ராகுல்காந்தி கூட, தமிழகத்தில் பிரச்சாரம் செய்கையில், பெரியாரைப் புகழ்ந்து, பெரியாரது புத்தகங்களைப் படிக்க வேண்டுமாய் மோடிக்கு அறிவுரை சொல்கிறார்.

இதனால்தான், தமிழகத்தின் அனைத்து மட்டங்களிலும், காங்கிரஸ் கட்சிக்கென்று ஒரு தனிப்பட்ட வாக்கு வங்கியும், மவுசும் தொடர்ந்து இருந்து வருகிறது. காங்கிரசுடன் கூட்டணி அமைக்க பல கட்சிகளும் ஆர்வம் காட்டுகின்றன.

ஆனால், அதிமுகவை கைப்பற்றுவதற்கு முன்னால் (பெரும்பான்மையோர் கருத்துப்படி), பாரதீய ஜனதாவிற்கு எதிர்பாராத சூழல்களில்தான் கூட்டணி வாய்ப்புகள் கிடைத்தன. அதுவும் பல வாய்ப்புகள், வாஜ்பாய் என்ற தனிமனிதரின் பிம்பத்திற்காக கிடைத்தவை. மேலும், நாடாளுமன்ற தேர்தல் என்று வருகையில்தான் அப்படியான வாய்ப்புகள் இருந்தனவே ஒழிய, சட்டமன்ற தேர்தலில் அக்கட்சியை சீந்துவாரில்லை.

2001ம் ஆண்டு பாரதீய ஜனதாவை உடன்வைத்துக் கொண்டு சட்டமன்ற தேர்தலை சந்தித்த(முரசொலி மாறனின் விருப்பத்திற்காக என்ற கருத்தும் உண்டு) திமுக கொடுத்த விலை மிக அதிகம். ஆனால், எதிரணியில், மூப்பனாரின் தமாகா மற்றும் காங்கிரஸ் கட்சியை உடன்வைத்து தேர்தலை சந்தித்த ஜெயலலிதா, தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியைப் பிடித்தார்.

ஆளும் அதிமுகவை தமது கட்டுப்பாட்டில் கொண்டுவந்தவுடன், தமிழகத்தையும் தம் வசத்தில் கொண்டுவந்துவிடலாம் என நினைத்த பாரதீய ஜனதா, ஏனோ தொடர்ந்து பல விஷயங்களில் சொதப்பியது. தமிழகத்தில், இதுவரை இல்லாத எதிர்ப்பில் சிக்கியது. சில விஷயங்களை நாசுக்காகக்கூட செய்யத் தெரியாமல், அனைத்தையுமே அப்பட்டமாக செய்து மாட்டியது.

தமிழ்நாட்டின் வெகுஜன ஊடகங்கள் என்னதான் அக்கட்சிக்கு முட்டுக் கொடுத்தாலும், பாரதீய ஜனதா, சமூக ஊடகங்களில் தொடர்ந்து கிண்டலுக்கும் கேலிக்கும்தான் உள்ளாகிறது.
வேறு மாநிலங்களுக்கு சாதாரணமாக போய்வரும் மோடிக்கு, தமிழகத்திற்கு வந்து செல்வது அவ்வளவு எளிதாக இருப்பதில்லை. அக்கட்சி நடத்தும் பொதுக்கூட்டங்கள் மற்றும் பேரணிகள் ஆட்களின்றி காத்தாடுகின்றன. கேரளாவின் சமூக மனப்பாங்கு, அவர்கள் வலிமைபெற ஏதுவாக இருக்கிறது. ஆனால், தமிழகத்தின் சமூக மனப்பாங்கு அப்படியானதல்ல.

கன்னியாகுமரி மாவட்டத்தில் மட்டும் அவர்களுக்கென்று ஒரு தனி செல்வாக்கு இருக்கிறதென்பதை ஒப்புக்கொள்ளும் அதேவேளையில், அம்மாவட்டம் கேரளத்தின் திருவாங்கூர் சமஸ்தானத்திலிருந்து பிரிந்து வந்து தமிழகத்தோடு இணைந்தது என்பதையும் ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும். கோவை போன்ற பகுதிகளில், குறிப்பிட்ட அளவில் தனக்கான வாக்கு வங்கியைப் பெருக்கிக் கொண்டாலும், அங்கே சொல்லிக்கொள்ளும் அளவிற்கெல்லாம் பாரதீய ஜனதா காலூன்றி விடவில்லை.

தமிழகத்தை தமக்கேற்ப மாற்றிவிடலாம் என்று சில நடிகர்களை களமிறக்கியேனும் அவர்கள் முயன்றாலும், தமிழகத்திற்கேற்ப அவர்கள்தான் மாற வேண்டுமென்ற நிலையே உள்ளது!

தமிழகம் என்ற முட்கள் நிறைந்த துள்ளு மீனை (பாரதீய ஜனதா கட்சிக்கு) விழுங்க முயன்றாலும், அதன் முள் அவர்களின் தொண்டையில் சிக்கிக்கொண்டு பாடாய்படுத்துகிறது..!

– மதுரை மாயாண்டி