புதுக்கோட்டை: ஆறுவழி சாலைக்கு எதிர்ப்பு தெரிவித்து திருவள்ளுர் மாவட்டத்தில் கிராம மக்கள் தேர்தலை புறக்கணித்துள்ள நிலையில், குடிநீர் தொட்டியில் மலம் கலந்த விவகாரத்தில் குற்றவாளிகளை கைது செய்யாத  திமுக  அரசை கண்டித்து வேங்கை வயல் மக்கள் தேர்தலை புறக்கணித்துள்ளனர். அதுபோல தூத்துக்குடி மாவட்டத்தில்,  உள்ள பொட்டலூரணி கிராம மக்கள் தேர்தல் புறக்கணிப்பு போராட்டத்தில்  ஈடுபட்டுள்ளனர்.  மேலும் பரந்துர் கிராம மக்கள் உள்பட பல பகுதிகளில் மக்கள் தேர்தலை புறக்கணித்தனர்.

மதுரையை அடுத்த திருமங்கலம் அருகே தனியார் உரத் தொழிற்சாலையை மூடக்கோரி தேர்தலைப் புறக்கணித்து 5 கிராம மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

திமுக அரசின் செயலற்ற  தன்மை காரணமாக, தமிழ்நாட்டில் இதுவரை இல்லாத அளவுக்கு  பல பகுதிகளில் பொதுமக்கள் தேர்தலை புறக்கணித்து போராடி வருகின்றனர்.

புதுக்கோட்டை மாவட்டம் வேங்கை வயல் கிராமத்தில் குடிநீர் தொட்டியில் மலம் கலந்த விவகாரதில் குற்றவாளிகளை கண்டுபிடிக்க முடியாமல் காவல்துறை திணறி வருகிறது. இதில், அரசியல் கலந்துவிட்டதாக அப்பகுதி கிராம மக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.  இந்த விஷயத்தில்  எந்த நடவடிக்கையும் இல்லாததால் தேர்தலை புறக்கணிக்க போவதாக அக்கிராம மக்கள் ஏற்கனவே பேனர் வைத்து அறிவித்திருந்தனர். இதுதொடர்பாக அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர்.

இந்த நிலையில், வேங்கை வயல் கிராம மக்கள்,  இன்று தாங்கள் கூறியபடி  தேர்தலை புறக்கணித்து உள்ளனர்.

இன்று  காலை 7 மணிக்கு தமிழ்நாட்டில் வாக்குப்பதிவு தொடங்கிய நிலையில், தமிழகத்தின் மற்ற பகுதிகளை போலவே வேங்கை வயலிலும் வாக்குப்பதிவுக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு, வாக்குப்பதிவு தொடங்கியது. ஆனால் பொதுமக்கள் யாரும் வாக்களிக்க வரவில்லை. இதன் காரணமாக அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ள நிலையில், தேர்தல் அதிகாரிகள் மக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வாக்களிக்க சம்மதிக்க வைப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

புதுக்கோட்டை மாவட்டம் வேங்கை வயல் கிராமத்தில் உள்ள குடிநீர் மேல்நிலை நீர்தேக்க தொட்டியில் சிலர் மலம் கலந்த சம்பவம்  கடந்த 2022 டிசம்பரில் நடைபெற்றது. இந்த விவகாரம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. சாதிய வன்கொடுமையின் உச்சமாக நடந்த இந்த சம்பவத்தில், ஆளும் கட்சி தரப்பை சேர்நத்வர்கள் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு கூறப்படுகிறது. இந்த கொடூர செயலில்  ஈடுபட்ட குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று, அரசியல் கட்சியினர் சார்பில் ஆர்ப்பாட்டங்க்ள நடத்தப்பட்டது. ஆனாலும் இந்த வழக்கில் எவ்வித முன்னேற்றமும் இல்லை.

குற்றவாளிகள் கைது செய்யப்படாத நிலையில், வழக்கு சிபிசிஐடி பிரிவுக்கு மாற்றப்பட்டது. அதேபோல் இந்த வழக்கில் சிறப்பு புலனாய்வு குழு அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வரும் நிலையில், வழக்கில் இதுவரை எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. மேலும் இதில் வேங்கை வயல் மற்றும் அதனை சுற்றியுள்ள இறையூர், முத்துக்காடு உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த சுமார் 150-க்கு மேற்பட்ட நபர்களிடம் விசாரணை மேற்கொண்டனர்.

உச்சநீதிமன்றமும், ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் விசாரணை ஆணையம் அமைந்துள்ள நிலையில், டி.என்.ஏ டெஸ்ட் மற்றும் குரல் மாதிரி சோதனை என பலகட்ட சோதனைகள் நடத்தப்பட்ட நிலையிலும் குற்றவாளிகள் இதுவரை கைது செய்யப்படவில்லை. இதனால் இந்த வழக்கில் குற்றவாளிகளை கைது செய்யும் வரையில் நாடாளுமன்ற தேர்தலை புறக்கணிப்பதாக வேங்கை வயல் கிராம மக்கள் கூறியிருந்தனர். 15 மாதங்கள் ஆகியும் இன்னும் குற்றவாளிகளை கண்டுபிடிக்காததால் தங்களுக்கு மன உளைச்சல் ஏற்பட்டுள்ளது. இதனால் தேர்தலை புறக்கணிப்பதாக ஊரில் நுழைவு வாயிலில் பேனர் ஒட்டப்பட்டுள்ளது.

அதுபோல தூத்துக்குடி: தூத்துக்குடி அருகே உள்ள பொட்டலூரணி கிராம மக்கள் தேர்தல் புறக்கணிப்பு போராட்டத்தில்  ஈடுபட்டனர். இதனால் வாக்குச்சாவடிகள் வெறிச்சோடி உள்ளது. அதிகாரிகள் பேச்சு வார்த்தை நடத்தி வருகின்றனர்.

தூத்துக்குடி அருகே உள்ள ஓட்டப்பிடாரம் சட்டப்பேரவை தொகுதிக்கு உள்பட்ட பொட்டலூரணி கிராமத்தில் ராணுவம் மற்றும் காவல் துறையில் பணியாற்றுபவர் அதிகம் வசித்து வருகின்றனர்.  இந்த கிராமத்தில்  1100 பேர் வாக்களிக்க தகுதி உடையவர்களாக உள்ளனர். வீடுகளில் கருப்புக் கொடி ஏற்றி தேர்தலுக்கு எதிர்ப்பை தெரிவித்துள்ளனர்.

பொட்டலூரணி  கிராமத்தைச் சுற்றி 3 தனியார் மீன் பதப்படுத்தும் ஆலைகள் செயல்பட்டு வருகின்றன. இந்த ஆலைகளில் இருந்து வெளியேறும் துர்நாற்றம் மற்றும் இரவு நேரங்களில் வெளியேறும் நச்சுப் புகை காரணமாக அந்த கிராமத்தில் உள்ள குழந்தைகள், நோயாளிகள், பொதுமக்கள் ஆகியோர் மூச்சுத் திணறல் மற்றும் பல்வேறு சுவாச கோளாறுகளால் பாதிக்கப்பட்டு வருகின்றனர் . எனவே இந்த மீன் கழிவு ஆலைகளை மாவட்ட நிர்வாகம் உடனடியாக மூட வலியுறுத்தி கடந்த 3 ஆண்டுகளாக  திமுக அரசை கண்டித்து, பல்வேறு கட்ட போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால் இதுவரை இந்த பிரச்னைக்கு தீர்வு எதுவும் எட்டப்படவில்லை.

இதனால் இப்பகுதி மக்கள் மக்களவைத் தேர்தலை ஒட்டுமொத்தமாக புறக்கணிக்க முடிவு செய்து, கிராமத்தில் வீடுகள் மற்றும் பல்வேறு பகுதிகளில் கருப்பு கொடிகளை கட்டி தேர்தல் புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் பொட்டலூரணியில் உள்ள அரசு நடுநிலைப்பள்ளி வாக்குச்சாவடி வெறிச்சோடி காணப்பட்டது. இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எல். பாலாஜி சரவணன் வாக்குசாவடிக்குச் சென்று பார்வையிட்டார். மேலும் வாக்களிக்க வருபவருக்கு ஏதேனும் பிரச்னை ஏற்படாமல் தடுக்க அப்பகுதி முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.

ரந்தூர் விமான நிலையம் அமைக்கும் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த ஓராண்டை கடந்தும்ட  போராடி வரும  ஏகனாபுரம், நாகப்பட்டு, கிராம மக்கள் மக்களவை  தேர்தல் வாக்குப்பதிவை புறக்கணித்துள்ளனர். ஏகனாபுரம் கிராமத்தில் 1400 வாக்காளர்கள் உள்ள நிலையில், ஏகனாபுரம் ஊராட்சி ஒன்றியம் அரசு நடுநிலைப் பள்ளியில் அமைந்துள்ள வாக்குச்சாவடி மையத்தில் கிராமத்தில் உள்ள வாக்காளர்கள் ஒருவர் கூட வாக்களிக்க வரவில்லை. ஸ்ரீ பெரும்புதூர் நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஏகனாபுரம், காஞ்சிபுரம் நாடாளுமன்ற தொகுதிக்கு உள்பட்ட நாகப்பட்டு ஆகிய இரு கிராமங்களில் உள்ள வாக்காளர்கள் வாக்களிக்க வராமல் வாக்களிப்பை புறக்கணித்து உள்ளனர். இன்று மாலை 6 மணி வரை பதிவு நடைபெறும் நிலையில் கிராம மக்கள் அனைவரும் வாக்களிக்க வர வேண்டும் என்பதே மாவட்ட நிர்வாகத்தின் எதிர்பார்ப்பாக உள்ளது.

மதுரை மாவட்டம் திருமங்கலத்தையடுத்த கள்ளிக்குடி – காரியாபட்டி சாலையில் உள்ள கே.சென்னம்பட்டி கிராமத்தில் கேரளாவைச் சேர்ந்த தனியார் உரத் தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது. இந்த ஆலையில் கோழி இறைச்சிக் கழிவுகள், மருத்துவக் கழிகளை சுத்திகரித்து உரம் தயாரிக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்த உர தொழிற்சாலையால் கே.சென்னம்பட்டி, குராயூர், ஓடைப்பட்டி, மேலப்பட்டி, பேய்குளம் உள்ளிட்ட ஐந்து கிராமங்களில் ஆலையிலிருந்து வெளியேறும் புகையால் சுற்றுவட்டார பகுதியில் துர்நாற்றம் வீசுவதாகவும் இதனால் குழந்தைகள், வயதானவர்கள் மூச்சுத் திணறால் பாதிக்கப்படுகின்றனர். மேலும், இந்த ஆலையால் 5 கிராமங்களில் மண்வளம், நிலத்தடி நீர் ஆதாரம் பாதிக்கப்படும் சூழ்நிலை உள்ளதால் இன்னும் ஒரு சில ஆண்டுகளில் இந்த பகுதி வறண்ட பூமியாக மாறிவிடும். எனவே சம்பந்தப்பட்ட உரஆலையை மூட வேண்டும் என வலியுறுத்தி ஏற்கனவே மனு அளித்திருந்த நிலையில் அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்காததால்  வட்டாட்சியர் செந்தாமரையிடம் உரத் தொழிற்சாலை மூடநடவடிக்கை எடுக்காவிட்டால் தேர்தலை புறக்கணிக்க போவதாக நேற்று வட்டாட்சியரிடம் ஐந்து கிராம மக்கள் மனு அளித்திருந்த நிலையில் இன்றுவரை எந்த நடவடிக்கையும் எடுக்காததால் இன்று தேர்தல் நடைபெறுவதையொட்டி இந்த ஐந்து கிராம மக்களும் தேர்தலை புறக்கணிக்கப் போவதாக அறிவித்து தற்போது போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதனால் 5 கிராமங்களில் வாக்குச்சாவடி மையம் வெறிச்சோடி கிடக்கிறது. இதனை அறிந்த திருமங்கலம் தேர்தல் நடத்தும் அலுவலர் சாந்தி, வட்டாட்சியர் செந்தாமரை, திருமங்கலம் டிஎஸ்பி அருள் தலைமையில் கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி வந்தனர்.

தொடர்ந்து சம்பந்தப்பட்ட உரத் தொழிற்சாலை மூடப்படும் வரை தேர்தலை புறக்கணிக்க போவதாக மக்கள் தெரிவித்தும் தற்போது மூன்று மணி நேரத்தை கடந்தும் ஐந்து ஊரைச் சேர்ந்த கிராம மக்கள் வாக்களிக்கவில்லை தொடர்ந்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அரவிந்த் பேச்சுவார்த்தை நடத்தி வருவதால் அப்பகுதியில் பரபரப்பான சூழல் நிலவி வருகிறது.

சிவகங்கை மாவட்டம் இளையான்குடி அருகே சித்தூரணியில் சாலை வசதி இல்லாதது, இளையான்குடி நகர் பகுதி கழிவுநீர் வருவது உள்ளிட்ட பிரச்சினை தொடர்பாக கிராம மக்கள் தேர்தல் புறக்கணிப்பில் ஈடுபட்டனர். ADVERTISEMENT கல்லூரணியில் உள்ள அவர்களுக்கான வாக்குச் சாவாடியில் ஒரு வாக்கு கூட அவர்கள் பதிவு செய்யவில்லை. இதை கவனித்த கல்லூரணி கிராம மக்களும் அதே கோரிக்கைகளை வலியுறுத்தி வாக்களிக்களிக்க மறுத்தனர். இதனால் அந்த வாக்குச் சாவடியில் 4 வாக்குகள் மட்டுமே பதிவாகியுள்ளது. மொத்தம் அந்த வாக்குச்சாடியில் சீத்தூரணி, கல்லூரணியைச் சேர்ந்த 850 வாக்காளர்கள் உள்ளனர்.

கிருஷ்ணகிரி பாராளுமன்ற தொகுதி வேப்பனஹள்ளி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மேட அக்ரஹார ஊராட்சியில் உள்ள கடவரஅள்ளி கிராமத்தில் இன்று காலை வாக்கு பதிவுக்கான பணிகள் நடைபெற்று தயார் நிலையில் இருந்தன. ஆனால், கடவரஅள்ளி கிராமத்தில் உள்ள வாக்காளர்கள் ஒருவர் கூட காலை 10 மணி நிலவரப்படி வாக்களிக்க வரவில்லை.  வனபகுதியையொட்டி உள்ள  இந்த பகுதியில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. மேலும், இந்த பகுதியில் 450 வாக்காளர்கள் உள்ளனர். இந்த நிலையில் இந்த பகுதியில் வீட்டுமனை பட்டா கேட்டு பல ஆண்டுகளாக அதிகாரிகளிடம் மனு அளித்தும், அவர்கள் எந்தவித நடவடிக்கையும் இதுவரை எடுக்கவில்லை. இதனால் இன்று நடைபெறுகிற தேர்தலை புறக்கணிக்கும் விதமாக ஒருவர் கூட நாங்கள் வாக்களிக்கவில்லை என்றனர்.

வேப்பனஹள்ளி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட மற்றொரு கிராமமான கருக்கனஅள்ளி கிராமத்திலும் தேர்தலை புறக்கணித்து வாக்காளர் யாரும் வாக்களிக்கவில்லை. மேலும், அந்த பகுதியில் 1050 வாக்காளர்கள் உள்ளனர். இந்த பகுதியில் 4 வழிச்சாலை பணிகள் நடைபெற்று வருவதால், பொதுமக்கள் சாலையை கடக்கும் விதமாக எந்தவித மேம்பாலமும் அமைக்கவில்லை. இதனால் பொதுமக்கள் 4 வழிச்சாலை கடக்க முடியாமல் அவதிப்பட்டு வந்தனர். இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் அதிகாரிகளிடம் தெரிவித்தும், எந்தவித நடவடிக்கை எடுக்கவில்லை. இதன் காரணமாக அந்த பகுதியில் உள்ள கிராம மக்கள் இன்று தேர்தலை புறக்கணித்து ஒருவர் கூட வாக்களிக்கவில்லை.

தேன்கனிக்கோட்டை அருகே காரண்டஅள்ளி ஊராட்சிக்குட்பட்ட கச்சுவாடி கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் வாக்காளர் ஒருவர் கூட காலை 7 மணி முதல் 10 மணி வரை வாக்களிக்க வரவில்லை. இதுகுறித்து அந்த பகுதி பொதுமக்கள் கூறும்போது, கச்சுவாடி பகுதியில் சாலை வசதி கோரி அதிகாரிகளிடம் பலமுறை புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கை எடுக்கவில்லை. இதன் காரணமாக நாங்கள் தேர்தலை புறக்கணிக்கின்றோம் என்றனர். இந்த பகுதியில் 961 பேர் வாக்காளர்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. வாக்காளர்கள் யாரும் வராததால் வாக்கு சாவடி மையம் வெறிச்சோடி காணப்பட்டன.

 

ஆறு வழிச்சாலைக்கு நிலம் கையகப்படுத்துவதை எதிர்த்து திருவள்ளுர் அருகே கிராம மக்கள் தேர்தல் புறக்கணிப்பு…