கோவை: கோவை பாஜக வேட்பாளர் அண்ணாமலை, தனது வாக்கினை செலுத்திய பிறகு, செய்தியாள்ர்களை சந்தித்தார். அப்போது, கோவை தொகுதியில் பாஜக வாக்காளர் களுக்கு பணம் கொடுத்ததாக யாரேனும் நிரூபித்தால் அடுத்த நிமிடமே அரசியலை விட்டு விலகுவதாக  கூறியவர், திமுகவினர் பணத்தை கொண்டுகோவையை வெல்ல முயற்சித்து வருகின்றனர் என குற்றம் சாட்டினார்.

 18-வது பாராளுமன்றம் அமைப்பதற்கான மக்களவை  தேர்தல் இன்று தொடங்கி ஜூன் மாதம் 1-ந்தேதி வரை 7 கட்டங்களாக நடைபெறுகிறது.  தமிழகம், புதுச்சேரி உள்பட 21 மாநிலங்களில் 102 தொகுதிகளில்  இன்று முதல் கட்ட தேர்தல் இன்று நடைபெற்று வருகிறது.  காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது.

இதையடுத்து அரசியல் கட்சியினர், பொதுமக்கள் தங்களது வாக்குகளை செலுத்தி வருகின்றனர். இந்த நிலையில் கரூர் மாவட்டம்  அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஊத்துப்பட்டி வாக்குச்சாவடியில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தனது வாக்கை பதிவு செய்தார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த  போது, இந்த தேர்தலை  ஒழிவு மறைவின்றி, நேர்மையாக நடத்தி இருக்கிறோம் என்றார். அப்போது,  செய்தியாளர்கள். வாக்காளர்களுக்கு  GPay மூலம் பணப்பட்டுவாடா செய்ததாக திமுக அளித்துள்ள புகார் குறித்து கேள்வி எழுப்பினர்.  அதற்கு பதில் அளித்தவர்,   கோவை தொகுதியைச் சேர்ந்த ஒரு வாக்காளர் வந்து பாஜக ஓட்டுக்கு பணம் கொடுத்ததாக தெரிவித்தாலும், அரசியலை விட்டு அந்த நிமிடமே விலகுகிறேன் என்று தடாலடியாக கூறினார்.

பணத்தை கொடுத்து தமிழகம் முழுவதும் வெற்றி பெறலாம் என திமுகவினரும் வேறு கட்சிகளும் நினைக்கிறார்கள். கோவை மக்களும், கரூர் மக்களும் அதற்கு தக்க பதிலடி கொடுப்பார்கள். கோவையில் கோடிக்கணக்கில் பணம் புரளுகிறது. திமுக எந்த அதிகாரிகளையேனும் வைத்து, ஒரு வாக்காளனையாவது பாஜக ஓட்டுக்கு பணம் கொடுத்ததாக நிரூபிக்கட்டும். கோவை தொகுதியில் இந்த தேர்தலை ஒரு வேள்வியாக நினைத்து களத்தில் இருக்கிறேன். இந்த தேர்தலில் ஜனநாயகத்தை மீட்டெடுத்து, பணநாயகத்தை மக்கள் தோற்கடிப்பார்கள். பணநாயகம் தோற்கடிக்கப்பட்டு, ஜனநாயகம் இந்த தேர்தலில் வெற்றி பெற உள்ளது. இந்த தேர்தலில் இருந்து பண அரசியல் வேலைக்கு ஆகாது என்று அவர்களுக்கு தெரிந்து விடும்.

தேர்தலுக்கு ஒரு நாள் முன்பு இரவு மின்சாரத்தை அனைத்துவிட்டு பணம் கொடுப்பது இந்த தேர்தலில் வேலைக்காகாது. முழு நேர்மையாக அறம் சார்ந்து இந்த தேர்தலை நடத்தி இருக்கிறோம். கோவை மக்களுக்கு நன்றாக தெரியும்.

 ஜூன் நான்காம் தேதி தமிழகம் முழுவதுமே மிகப்பெரிய மாற்றம் இருக்கும்.

இந்தத் தேர்தலில் மோடிக்கு மக்கள் நல்ல பாடம் புகட்டுவார்கள் என்று முதல்வர் கூறியதாக எழுப்பிய கேள்விக்கு, நல்ல பாடம் என்றால் தமிழகத்தில் பாஜகவுக்கு 39க்கு 39 தொகுதி வெற்றி வாய்ப்பை மக்கள் கொடுப்பார்கள் என்று அர்த்தம் என்றார்.

நள்ளிரவு 3மணிநேரம் பவர் கட்: திமுக பணப் பட்டுவாடா செய்யவே வடசென்னையில் மின்தடை என தேர்தல் ஆணையத்தில் பாஜக புகார்…