ஷங்கர் இயக்கத்தில், கமல்ஹாசன் நடிப்பில் 1996ல் வெளியான படம் ‘இந்தியன்’. தற்போது இந்தப் படத்தின் இரண்டாம் பாகத்தை ஷங்கர் இயக்கி வருகிறார். இந்தப்படத்திலும் நடிகர் கமல்ஹாசன் ஹீரோவாக நடிக்கிறார். படத்தை லைகா நிறுவனம் தயாரித்து வருகிறது.

காஜல் அகர்வால், நெடுமுடி வேணு, போமன் இரானி உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். ரத்னவேல் ஒளிப்பதிவு செய்து வருகிறார்.

இந்த படத்தில் காஸ்டியும் டிசைனர் அமிர்தா ராம் தற்போது ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

இந்தப் படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்பட்ட அன்றே, ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டுவிட்டது படக்குழு. மேலும், இதுவரை சுமார் 5 போஸ்டர்கள் வரை வெளியிட்டுள்ளனர்.

இந்நிலையில் ‘இந்தியன் 2’ படத்தின் புதிய போஸ்டர் என்ற தலைப்பில் பலரும் ஒரு போஸ்டரைப் பகிர்ந்தார்கள். அதில் கமல் உட்கார்ந்திருப்பது பின்புறம், 1.76 லட்சம் கோடி என்பது எண்ணில் குறிப்பிடப்பட்டு இருந்தது.

2ஜி வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட தொகை என்பதால்,இந்த போஸ்டர் விவகாரம் மிகுந்த சர்ச்சையை கிளப்பியது .

இந்நிலையில் லைகா நிறுவனம் தங்களுடைய ட்விட்டர் பதிவில் “இந்த ‘இந்தியன் 2’ போஸ்டர் அதிகாரபூர்வமானது அல்ல. தயாரிப்பு நிறுவனமோ, இயக்குநரோ அவரது குழுவோ இதை உருவாக்கவில்லை” என்று முற்றுப்புள்ளி வைத்தது.