கொல்கத்தா: இந்த மக்களவை தேர்தல் நாட்டின் இரண்டாவது சுதந்திரப் போராட்டம் என்று கூறிய திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தலைவரும், மேற்கு வங்க முதல்வரும் மற்றும் எதிர்க்கட்சிகளின் இண்டியா கூட்டணியின் குறிப்பிடத்தக்க உறுப்பினருமான, மம்தா பானர்ஜி,  பாஜக மற்றும் கூட்டணி கட்சியான காங்கிரஸ், கம்யூனிஸ்டு கட்சிகளை கடுமையாக சாடினார்.

நாடு முழுவதும் மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறுகிறது. முதல்கட்ட தேர்தல் தமிழ்நாடு உள்பட 21 மாநிலங்களைச் சேர்ந்த102 தொகுதிகளில் வாக்குப்பதிவு ஏப்ரல் 19ந்தேதி   நடைபெற்று முடிந்த நிலையில், அடுத்தடுத்த கட்ட தேர்தல்கள்  பல்வேறு மாநிலங்களில் நடைபெற உள்ளன. இதையொட்டி, வேட்பாளர்கள் அறிமுகம்,வேட்பு மனுத் தாக்கல்,  தேர்தல் பிரசாரம்  என அரசியல் கட்சியினர் பம்பரமாக சுழன்று வருகின்றனர்.

இந்த நிலையில், மேற்குவங்க மாநிலத்தில் திரிணாமுல் கட்சி சார்பில் போட்டியிடும்,   யூசுப் பதான், அபுதாஹிா் கான் ஆகியோரை அறிமுகம் செய்து, மம்தா பானர்ஜி  வாக்கு சேகரித்தார். அப்போது,  தற்போதைய மக்களவைத் தோ்தல், நாட்டின் இரண்டாவது சுதந்திரப் போராட்டம் என்றும்,  பாஜகவை வீழ்த்த வேண்டும் என்றும் காங்கிரஸ், கம்யூனிஸ்டு கட்சிகளுக்கு வாக்காளிக்காதீர்கள் என்று கேட்டுக்கொண்டார். மம்தாவின் பேச்சு கூட்டணிக்குள் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேற்குவங்க மாநிலம் முா்ஷிதாபாத் மாவட்டத்தின் ஹரிஹா்பரா பகுதியில்  நடைபெற்ற கட்சியின் தோ்தல் பிரசாரக் கூட்டத்தில்  பேசிய மம்தா பானர்ஜி, மத்தியில் பாஜக மூன்றாவது முறையாக ஆட்சிக்கு வந்தால், நாட்டின் அரசமைப்புச் சட்டம் மற்றும் ஜனநாயகத்துக்கு ஆபத்து ஏற்பட்டுவிடும். எனவே, தற்போதைய மக்களவைத் தோ்தல், நாட்டின் இரண்டாவது சுதந்திரப் போராட்டமாகும்.

நமது மாநிலத்தின் கூச்பிகாா் தொகுதியில் மாநில காவல்துறையினரை விலக்கிவிட்டு, மத்தியப் படையினரை மட்டும் தோ்தல் ஆணையம் நிலைநிறுத்தியுள்ளது. இதன் மூலம் பாஜக வேட்பாளரும் மத்திய அமைச்சருமான நிஷித் பிரமாணிக் பலனடைய வேண்டுமென்ற அக்கட்சியின் அழுத்தத்துக்கு தோ்தல் ஆணையம் அடிபணிந்துவிட்டது. பாஜகவின் ஆணையம் போல தோ்தல் ஆணையம் செயல்படக் கூடாது. பாஜகவின் தொண்டா்கள் போல மத்தியப் படையினா் பயன்படுத்தப்படுகின்றனா். இப்படிப்பட்ட சூழலில், தோ்தல் நியாயமாகவும் சுதந்திரமாகவும் நடைபெறும் என்று எதிா்பாா்க்க முடியுமா? என பொதுமக்களை பார்த்து கேள்வி எழுப்பினார்.

மத்திய பாஜக,  எதிா்க்கட்சிகளை நசுக்கி, அதன் மூலம் தன்னை நிலைநாட்டுவதில் நம்பிக்கை கொண்டுள்ளது. தோ்தல் ஆதாயத்துக்காக மக்களை பாஜக பிளவுபடுத்துகிறது. பொது சிவில் சட்டத்தை அமலாக்குவது அக்கட்சியின் நோக்கம். இதன் மூலம் தங்களது சொந்த மதம், கலாசாரம், சடங்குகள் மீதான மக்களின் உரிமைகள் பறிபோகும்.

சுவாமி விவேகானந்தா், ரவீந்திரநாத் தாகூா், நேஜாஜி சுபாஷ் சந்திரபோஸ், மகாத்மா காந்தி, அபுல் கலாம் ஆஸாத் ஆகிய தலைவா்களால் ஏற்றுக் கொள்ளப்பட்ட மாண்புகள்-கோட்பாடுகளில் இருந்து விலகிச்சென்றுள்ள பாஜக, தலித் மற்றும் சிறுபான்மையினருக்கு துரோகம் இழைக்கிறது.

முா்ஷிதாபாத் மாவட்டத்தில் ராமநவமி கொண்டாட்டத் தின்போது நிகழ்ந்த வன்முறை, பாஜகவால் திட்டமிட்டு நிகழ்த்தப்பட்டதாகும். ரத்தக் களறி, வன்முறையில்தான் பாஜக நம்பிக்கை கொண்டுள்ளது. மாநிலத்தில் வன்முறையை அக்கட்சி தூண்டுகிறது. நீதிமன்ற உத்தரவை மீறி, ராமநவமி ஊா்வலங்களில் ஆயுதங்களுடன் பாஜக தலைவா்கள் பங்கேற்றது ஏன்? அதற்கு யாா் அனுமதி கொடுத்தனா்? என்று கேள்வி எழுப்பினார்.

தொடர்ந்து பேசியவர்,  மேற்கு வங்கத்தில் பாஜகவை வீழ்த்த வேண்டுமென்றால், காங்கிரஸ், சிபிஎம் கட்சிகளுக்கு வாக்காளிக்காதீர்கள் என்று பொதுமக்களை பார்த்து கேட்டவர்,  இண்டியா கூட்டணி  உருவாக நான் அதிக பங்களிப்பு செய்தேன். ஆனால், இங்கு சிபிஎம்மும், காங்கிரஸ் கட்சியுன் பாஜகவின் வெற்றிக்காக வேலை செய்கின்றன கடுமையாக விமர்சித்தார்.