ரவுண்ட்ஸ் பாய்:

ஜினி பேசுவது புரிவதுபோல இருக்கும் ஆனால் புரியாது. கமல் பேசுவது புரியாதது போல இருக்கும் புரியவே புரியாது. ( உங்களுக்குப் புரியுதா இல்லையா?)

சரிவிடுங்க.. மேட்டருக்கு வருவோம்.

நேத்தும் கவிதை மாதிரி எழுதி ட்விட்டியிருக்காரு கமல்ஹாசன். இது, எல்லாம் தெரிஞ்ச நடிகை கஸ்தூரிக்கே இது புரியலை.. “மண்ட காயுது”ன்னு ட்விட்டி இருக்காங்க, கஸ்தூரி.

என்னடா பண்ணலாம்னு நினைச்சிக்கிட்டிருந்தப்பதான், கவிஞர் மகுடேசுவரன் அப்படிங்கிறவர், கமல் ட்விட்டுக்கு பொழிப்புரை எழுதி முகநூல்ல போட்டிருக்காரு.

முதல்ல, கமல் கவிதையை மென்னு முழுங்கி படிச்சுருங்க..

“இடித்துரைப்போம் யாருமினி மன்னரில்லை
துடித்தெழுவோம் மனதளவில் உம்போல் யாம்
மன்னரில்லை

தோற்று இறந்தால் போராளி
முடிவெடுத்தால் யாம் முதல்வர்
அடிபணிவோர் அடிமையரோ?
முடிதுறந்தோர் தோற்றவரோ?
போடா மூடா எனலாம் அது தவறு
தேடா பாதைகள் தென்படா.
வாடா தோழா என்னுடன்
மூடமை தவிர்க்க முனைவரே தலைவர்..”

ஆச்சா… இப்போ மகுசேசுவரன் கொடுத்திருக்கிற பொழிப்புரையை படிங்க..

 

இடித்துரைப்போம் = இடித்துரைத்தல் என்றால் “கழறிக் கூறுதல்”. கழறுதல் என்றால் சினந்து ஒன்றைச் சொல்லுதல். இடித்துரைத்தல் என்றால் ஆட்சிச் செருக்கில் உள்ளவர் செய்யும் தவறுகளை அறிவில் பெரியவர்கள் சான்றோர்கள் கடிந்து கூறுதல்.

யாருமினி மன்னரில்லை = யாருமிங்கே இனிமேல் மன்னரில்லை. மன்னர் என்ற மாமதம் ஒருவர்க்குத் தேவையுமில்லை. எல்லாரும் ஓர் நிறை. குடியும் கோனும் என்ற நிலை வேறுபாடு இனியில்லை.

துடித்தெழுவோம் = பரபரத்து எழுந்து நிற்போம். துள்ளிக் குதித்து எம் தாழ்ச்சிகளிலிருந்து எழுவோம்.

மனதளவில் = மனத்தளவிலேனும். மனத்திலாவது நாம் பணிந்து நில்லாமல் எழுந்து நிற்போம்.

உம்போல் யாம் மன்னரில்லை = உங்களைப்போல் நாங்கள் அரசர் இல்லை. மக்களில் ஒருவர்.

தோற்றிறந்தால் போராளி = ஒருவேளை இப்போரில் தோற்றுப்போய் இறந்துவிட்டால் என்ன… போராளி என்று போற்றப்படுவோம்.

முடிவெடுத்தால் யாம் முதல்வர் = இதுதான் போர் இதுதான் போர்க்களம் என்று அந்த முடிவை எடுத்துவிட்டால் அவ்விடத்தில் நாங்களே முதலாவதாக இருப்போம்.

அடிபணிவோர் அடிமையரோ ? = வணங்கி நிற்கின்றவர்கள் என்பதால் அவர்களை அடிமைகள் என்று கருதுவதா ?

முடிதுறந்தோர் தோற்றவரோ ? = இந்த ஆட்சியும் வேண்டா, அரசர் பதவியும் வேண்டா என்று மணிமுடியைக் கழற்றி வைத்திருப்பவர் தோற்றவராகிவிடுவாரா ?

போடா மூடா எனலாம் = அடப்போடா அறிவற்றவனே என்று சொல்லலாம்.

அது தவறு = அவ்வாறு கூறுவது தவறு.

தேடாப் பாதைகள் தென்படா = தேடும்போதுதான் ஒன்று கண்ணுக்குத் தெரியும். பாதைகளைத் தேடினால்தான் புலப்படும். தேடாமலே இருந்தால் எந்தப் பாதையும் தென்படாது. அதே இடத்தில் நிற்க வேண்டியதுதான்.

வாடா தோழா என்னுடன் = தோழனே என்னோடு வா… பாதைகளைத் தேடுவோம்.

மூடமை தவிர்க்க முனைவரே தலைவர் = மூடத்தனங்கள் அனைத்தையும் களைந்தெறிய முன்வந்து பணியாற்றுவோர் யாரோ அவரே தலைமை ஏற்கத் தகுந்தவர்.

இந்த மகுடேசுவரன் சொல்றத சாதாரணமா எடுத்துக்க வேணாம். போன ஜனவரி 30ம் தேதி காந்தி நினைவு நாள்ள கமல் இதே மாதிரி “ஹிம்சாபுரி”னு ஒண்ணு எழுதினாரு. அதுக்கும் இந்த மகுடேசுவரன்தான் பொழிப்புரை எழுதி முகநூல்ல போட்டாரு. அதோட, “கமல் ஆகச்சிறந்த கவிஞர்”னு புளகாங்கிதமும் அடைஞ்சாரு.

பதிலுக்கு கமலும், “மகுடேசுவரன் பொழிப்புரைக்கும், பாராட்டுக்கும் நன்றி” அப்படின்னு பாராட்டி ட்விட்டுனாரு.

அதனால, கமல் எழுதிய கவிதை(!)க்கு இதுதான் அர்த்தம். புரிஞ்சுக்கோங்க!