‘அறிவும் அன்பும்’ என்று தலைப்பில் உருவாகியுள்ள கொரோனா விழிப்புணர்வு பாடலை (ஏப்ரல் 23) காலை யூ-டியூப் தளத்தில் வெளியிட்டார் கமல்.

பாடலை வெளியிட்டவுடன், ஜூம் செயலி மூலம் பத்திரிகையாளர்களுடன் கலந்துரையாடினார் கமல். அப்போது:-

“இந்த சூழலில் இந்தப் பாடல் ஒரு சிகிச்சை போல, ஆறுதலைத் தரும் என்று நம்புகிறேன். இந்தப் பாடலை நான் இயக்கியதால் கோவிட்-19 போய்விடாது. வளர்ந்த எல்லாருமே ஒரு காலத்தில் குழந்தையாகத் தாலாட்டு கேட்டவர்கள் தான். எனவே, அப்படி, இந்தப் பாடலை, வீதியில் உணவின்றி இருக்கும் மனிதனுக்காக உருவாக்கினோம். ஒருவேளை இது அவருக்கு நாளைக்கான நம்பிக்கையைத் தரலாம்.

இப்போதுள்ள சூழலில் அரசியல் ரீதியான விமர்சனத்துக்கு நேரமில்லை. நாம் அந்த நிலைக்கு வந்துவிட்டோம். பிறகு நாம் விவாதித்துக் கொள்ளலாம். கரோனா என்பது மேகங்கள் போல உடனே விலகிவிடாது. உலகத்தின் வரலாற்றுக்கு இடப்பட்ட சவால் இது. இதிலிருந்து மனிதர்கள் எழ வேண்டும். ஹிரோஷிமா-நாகசாகியில் அணுகுண்டு போடப்பட்ட பிறகு ஜப்பான் எழுச்சி பெறாது என்று நினைத்தார்கள். ஆனால் அவர்கள் எழுந்து நின்றார்கள். நாமும் எழுவோம்.

நான் அரசுடன் சேர்ந்து பணியாற்றவும் தயார். எனது அணி முடிந்த உதவிகள் அனைத்தையும் செய்து கொண்டிருக்கிறது. எனது அலுவலகத்தை மருத்துவமனையாக மாற்றத் தயாராக உள்ளேன் என்று ஏற்கனவே கூறிவிட்டேன். ஆனால் அரசிடமிருந்து பதில் வரவில்லை” என பேசினார் கமல்.