சென்னை: தமிழ்நாடு அரசின் 2024 – 2025ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டை நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு  இன்று (பிப்.18) காலை சட்டப்பேரவையில் தாக்கல் செய்கிறார்.

நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு ஏற்கனவே கல்வித்துறை, தொழிற்துறை அமைச்சராக சிறப்பாக பணியாற்றிய நிலையில், தற்போது நிதியமைச்சராக இருந்து வருகிறார். அவர் நிதியமைச்சராக பொறுப்பேற்ற பிறகு தாக்கல் செய்யப்படும் முதல் பட்ஜெட் இது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த பட்ஜெட்டில், நாடாளுமன்ற தேர்தலை காரணமாக, பல கவர்ச்சிகரமான அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

தமிழ்நாடு சட்டப்பேரவையின்  2024ம் ஆண்டின் முதல் கூட்டம், ஜனவரியில் தொடங்குவதற்கு பதிலாக பிப்ரவரியில்தான் தொடங்கியது. ஜனவரியில் முதலீட்டாளர்கள் மாநாடு, முதலமைச்சரின் வெளிநாடு பயணம் காரணமாக, பேரவை கூட் முடியாததால்,  முதல் கூட்டம் கடந்த பிப்ரவரி 12ஆம் தேதி தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி உரையுடன் தொடங்கியது.

இதைத்தொடர்ந்து, பேரவையில் ஒரே நாடு ஒரே தேர்தல் மற்றும் தொகுதி மறு சீரமைப்புக்கு எதிரான தீர்மானம் நிறைவேற்றப்பட்டதுடன், உறுப்பினர்களின் பல்வேறு கேள்விகளுக்கு அமைச்சர்கள் பதில் அளித்தனர்.  கடந்த  15ஆம் தேதி ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான முதல்வர் மு.க.ஸ்டாலின் பதில் உரையாற்றினார்.

இந்த நிலையில், இன்றைய பேரவை அமர்வில், 2024 – 2025ஆம் நிதியாண்டுக்கான தமிழக அரசின் பொது பட்ஜெட்டை நிதி மற்றும் மனிதவளத் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்கிறார்.

காலை 10மணிக்கு பேரவை கூடியதும், வழக்கமான நடைமுறைகளைத் தொடர்ந்து நிதியமைச்சர் தங்கம் தென்னரசு 2024-25ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார். அதைத்தொடர்ந்து  நாளை (பிப்ரவரி 20) வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் வேளாண் நிதிநிலை அறிக்கையைத் தாக்கல் செய்கிறார்.

இந்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளதால்,  தமிழ்நாடு அரசு தாக்கல் செய்யும் பட்ஜெட்டில் பல்வேறு கவர்ச்சிகரமான அறிவிப்புகள் வெளியாக வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

பொது பட்ஜெட், வேளாண் பட்ஜெட் தாக்கலைத் தொடர்ந்து பிப்ரவரி 20ஆம் தேதி முதல் 2 பட்ஜெட்கள் மீதான விவாதமும் தொடங்குகிறது. பிப்ரவரி 21ஆம் தேதி காலை மற்றும் மாலை என இரண்டு வேலைகளிலும் பட்ஜெட் மீதான விவாதம் நடைபெறுகிறது. அதன் பின் பிப்ரவரி 22ஆம் தேதி விவாதத்திற்கு இரு அமைச்சர்களும் பதில் அளிக்கின்றனர். அதைத் தொடர்ந்து நிதி ஒதுக்கத்துக்கான சட்டம் முன் வடிவு தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்படுகிறது.