திருவாரூர்

னமழை காரணமாகத் திருவாரூரில் உள்ள கமலாலயம் குளத்தின் சுற்றுச் சுவர் இடிந்து விழுந்துள்ளது.

தமிழகத்தில் உள்ள கோயில்களில் திருவாரூர் மாவட்டத்தில் ஆயிரம் ஆண்டுகளுக்கு மேல் பழமையானது தியாகராஜர் கோயிலும் ஒன்றாகும்.  இக்கோயிலுக்கு எதிரே ஐந்து வேலி நிலப்பரப்பில் எதிரே கமலாலயக் குளம் அமைந்துள்ளது. திருவாரூர் மாவட்டத்தில் நேற்று இரவு பெய்த கனமழையின் காரணமாக அந்த குளத்தின் தென்கரையில் அமையப்பெற்றுள்ள சுற்றுச்சுவர் சுமார் 100 அடி நீளம் உள்வாங்கி குளத்துக்குள் விழுந்துவிட்டது.

நேற்று திருவாரூர் மாவட்டத்தில் நள்ளிரவில் சுமார் ஐந்து சென்டிமீட்டர் அளவுக்கு கனமழை பெய்தது. இதனால்  இந்த சுற்றுச் சுவர் பாதிப்படைந்து வலுவிழந்து குளத்திற்குள் விழுந்துள்ளது. சுற்றுச் சுவர் விழுந்ததைத் தொடர்ந்து தற்போது தெற்கு கரையில் போக்குவரத்து முற்றிலுமாக துண்டிக்கப்பட்டு போக்குவரத்து காவலர்கள் பொதுமக்களை வேறு வழியாகத் திருப்பி அனுப்புகின்றனர்.

இவர்களுக்கு உதவியாக நகராட்சி ஊழியர்களும் அங்கு நின்று பணி புரிந்து கொண்டிருக்கிறார்கள்.  குளத்தின் தென் கரையில் இடிந்து விழுந்த சுற்றுச் சுவர் அருகில் இருந்த மின் கம்பங்கள் பழுதடைந்து நன்றாகச் சாய்ந்து உள்ளன. இதையொட்டி அந்த பகுதியில் மின் விநியோகம் நிறுத்தப்பட்டு மின் ஊழியர்கள் கம்பங்களைச் சரி செய்யும் பணிகளில் ஈடுபட்டு வருகிறார்கள்.