கோலாகலமாக நடைபெற்றது திருவான்மியூர் மருந்தீஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம்! ஆசி வழங்கியது கருடன் – வீடியோ

Must read

சென்னை:

சென்னை  திருவான்மியூர் மருந்தீஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம்  இன்று கோலாகலமாக நடைபெற்றது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு கோபுர தரிசனம் கண்டு மெய் சிலிர்ததனம். கும்பாபிஷேகத்தின் போது வானத்தில் கருடன் வட்டமிட்டு பக்தர்களுக்கு ஆசி வழங்கியது.

புகழ்பெற்ற சிவன் ஸ்தலங்களில் சென்னை சென்னை திருவான்மியூர் மருந்தீஸ்வரர் கோவிலும் ஒன்று. நோய் தீர்க்கும் மருத்துவரான மருந்தீஸ்வரர் கோவிலில்   12 ஆண்டுகளுக்கு பிறகு இன்று மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.

முன்னதாக  கோவிலில் உள்ள விஜயகணபதி, சுப்பிரமணியர், மருந்தீஸ்வரர், திரிபுரசுந்தரி, தியாகராஜர், நடராஜர் முதலான சன்னதிகளில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு அனைத்து சன்னதி விமானங்களுக்கும் வண்ணம் தீட்டப்பட்டு,  கோபுரங்களுக்கு பாலாலயம் செய்யப்பட்டு, கிழக்கு ஏழுநிலை ராஜகோபுரம், ஐந்துநிலை கிழக்கு ரிஷிகோபுரம், மேற்கு ஐந்துநிலை மேற்கு கோபுரம் ஆகிய கோபுரங்களில் பராமரிப்புத் திருப்பணி மேற்கொள்ளப்பட்டு, வண்ணம் தீட்டப்பட்டது.

அதையடுத்து யாக சாலை பூஜைகள் நடைற்று வந்தன. கடந்த 1ந்தேதி முதல் யாகசாலை பூஜைகள் தொடங்கின. மூர்த்தி ஹோமம், சாந்தி ஹோமம் நடத்தப்பட்டது. 2-ந்தேதி கோ பூஜை, கஜபூஜை, கன்யாபூஜை, சுமங்கலி பூஜை, கால பூஜைகள் நடைபெற்றது. இன்று காலை  7 மணிக்கு 6-ம் கால அவபிருதகால யாகசாலை பூஜைகள்   தொடங்கி நடைபெற்றது.

அதைத் தொடர்ந்து புனித நீர் எடுத்துச்செல்லப்பட்டு  கோபுர கலசங்களுக்கு கும்பாபிஷேகம்  வெகு விமரிசையாக செய்யப்பட்டது. பக்தர்கள் நமச்சிவாயா கோஷமிட்டு கோபுர தரிசனம் பெற்றனர். பக்தர்கள் மீது புனித நீர் தெளிக்கப்பட்டது.

கோபுர கலசத்தில் புனித நீர் ஊற்றும்போது இரண்டு கருடன்கள் வானத்தில் வட்டமிட்டு ஆசி வழங்கியது. இதைக் கண்ட பக்தர்கள் பக்தி பரவசமடைந்தனர்.  கும்பாபிஷேகத்தின்போது, கோபுர கலசங்கள் மீது டிரோன் மூலம் மலர்கள் தூவப்பட்டது.

இந்த கும்பாபிஷேக நிகழ்வில் துணைமுதல்வர் ஓபிஎஸ் உள்பட முக்கிய நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

கும்பாபிஷேகத்தையொட்டி மக்கள் கூட்டம் அலைமோதியது. முன்னதாக பக்தர்களின் வசதிக்காக கோவில் வளாகத்தில்,  மரக்கட்டைகளால் ஆன தடுப்புவேலி அமைக்கப்பட்டிருந்தது. பக்தர்கள், கட்டளைதாரர்கள், அபிஷேகதாரர்கள் கிழக்கு ராஜகோபுரம் வழியாகவும், திருப்பணி உபயதாரர்கள், முக்கிய பிரமுகர்கள் மேற்கு ராஜகோபுரம் வழியாகவும் கோவிலுக்குள் வந்து தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர்.

இன்று இரவு 7 மணிக்கு பஞ்சமூர்த்திகள் திருவீதி உலா, தியாகராஜர் திருக்கல்யாண வைபவம் நடக்க உள்ளது.

More articles

Latest article